Friday, January 27, 2012

நாலு கால் சூறாவளி!

--- படங்கள்: எஸ்.கார்த்திகேயன் ---   --- கமெண்ட்ஸ்: த்ராவிட் ---

பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நான் எடுத்து புதிய தலைமுறை இதழில் வெளியான புகைப்படங்கள்.

”மாடுகளுக்கு கொம்பு இருக்கு.. வீரர்களுக்கு தெம்பு இருக்கு.. எங்களுக்கு வம்பு எதுக்கு?

”பாஞ்சு போயி வீரர்களை தூக்கறதை விட்டுட்டு பதுங்கி நிக்கற எங்ககிட்ட வாலாட்டறியே!

”பாத்ததுமே ஏத்துதா திகிலை? தில் இருந்தா தொட்டுப்பாரு திமிலை!”

”அலேக்கா தூக்கி வீசுது சுடலை... உருவாம விட்டுச்சே குடலை!”

”ஒத்தைக்கு ஒத்தை போட்டி... செத்துப் பொழைச்சேன் ஆத்தி!”

”அடக்கிட்டா சிங்கம்லே! அகப்பட்டா ஆஸ்பத்திரி!”

”சீறிப் பாயற காளை... ஏறி மிதிக்குது ஆளை!”

”ரவுண்டு கட்டி நின்னா மெரண்டு போவேனாக்கும்... இருடி!”

”கொம்பை மடக்கிருச்சு காளை... சூடுங்கம்மா வெற்றி மாலை!”

(நன்றி: புதிய தலைமுறை மற்றும் த்ராவிட்)

Monday, January 23, 2012

சும்மா அதிருதுல்ல!

---------- எஸ்.கார்த்திகேயன் ----------

தமிழர்களின் தப்பாட்ட இசைக்கலையை கற்று, அதை ஆவணப்படமாகவும் எடுத்திருக்கிறார் ஓர் அமெரிக்கப் பேராசிரியை

சோயி செர்னியன்

          இளையான்குடி 'குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழு’ என்றாலே சிவகங்கை மாவட்டம் முழுக்க பிரபலம். கூடவே ‘அந்தக் குழுவுல ஒரு வெள்ளைக்கார அம்மாவும் தப்பாட்டம் ஆடுவாங்களே’ என்று சிலாகிப்பார்கள் மக்கள். அப்படியா என்று விசாரிக்கப் போனோம்; வியந்து பார்த்தோம். மற்ற தப்பாட்டக் கலைஞர்களுக்கு நிகராக, தப்பு அடிக்கும் கைகள் துடிக்க... இசை தெறிக்க அசத்திக் கொண்டிருந்தார் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி. அவர் பெயர் டாக்டர் சோயி செரினியன். அமெரிக்காவிலுள்ள ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எத்னோ மியூசிக்காலஜி(*) துறை பேராசிரியை.

          “அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் எழுதிய நூல்களின் மூலம் தலித் மக்களைப் பற்றி அதிகம் அறிந்து கொண்டேன். நான் இசையியல் பேராசிரியை என்பதால், இம்மக்களின் மிகச்சிறந்த இசைக்கலையான தப்பாட்டத்தை ஆவணப்படுத்த எண்ணினேன். தப்பாட்டக் கலைஞர்களின் தொடர் வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதற்குத் தமிழகம் முழுவதும் கலைக் குழுக்களைத் தேடி அலைந்தேன். இறுதியாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள ‘குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழு’வை தேர்ந்தெடுத்து, அவர்கள் உதவியால் தப்பாட்டக்கலை நிகழ்வுகளை படம் பிடித்தேன். அப்போது என்னுடனேயே இருந்து எனக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருந்தவர் தமிழகத்தின் மிகப் பிரபலமான நாட்டுப்புறக் கலை ஆய்வாளரும் கலைஞருமான டாக்டர். கே.ஏ.குணசேகரன்” என்று கொஞ்சம் தமிழும் நிறைய ஆங்கிலமும் கலந்து பேசுகிறார் செரினியன்.

           குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழுவினருடனேயே தங்கிய செரினியன், ஆவணப்படுத்துவதற்கான முதல் கட்டமாக தப்பாட்டக் கலையை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார். மிருதங்கம் மற்றும் டிரம்ஸ் இசைக்கலைஞர் இவர் என்பதால் தப்பாட்டக் கலைஞர்கள் கற்றுக் கொடுத்த இசை மிக எளிதில் செரினியனுக்கு வசப்பட்டுவிட்டது. அதிலும் தப்பு அடித்துக் கொண்டே ஆடுவது சற்று சிரமமான காரியமெனினும் அதையும் கற்றுக் கொண்டு இவர் சிறப்பாக ஆடுவது ஆச்சரியம்.

          “தப்பாட்டக் குழுவில் உள்ள 9 பேரும் எனது ஆசான்கள். அவர்கள் சிறப்பான முறையில் எனக்குக் கற்றுக் கொடுத்தனர். தப்பில் உள்ள அந்தத் தாள அடிகளை வாயால் கூறி எளிதாக எனக்கு விளங்க வைத்தனர். எனது ஆசான்கள் சொல்லிக் கொடுக்கும் தாளங்கள் சில நேரம் சற்று கடினமாக இருந்தாலும், அதை எப்படியாவது முயற்சித்துக் கற்றுக் கொள்ளும் மாணவியாகத் தான் நான் இருந்தேன்” என புன்னகைக்கிறார் செரினியன்.

ஏசையா
          குறிஞ்சி மலர் குழுவின் வாத்தியார் ஏசையா கூறுகையில், “செர்னியன் அம்மாவுக்கு தப்பு கத்துக் கொடுக்கும் போது சில நேரம் அவங்க சரியா பண்ணலேனு நாங்க கோபப்பட்டாலும், ரொம்ப பொறுமையா நடந்துக்குவாங்க. அதே சமயம் எங்களுக்கு அவங்க பல்வேறு விஷயங்களில் வழிகாட்டியாகவும் இருப்பாங்க. வெளிதேசத்துல பேராசிரியரா இருக்கற அவங்களே ஒரு மாணவியா நம்மகிட்ட பாடம் படிக்கிறப்போ, நாமளும் நம்ம கலைக்கு மரியாதை செய்யணுமில்ல? அதனாலதான் அவங்க எங்க குழுவுக்கு வந்து, எனக்கு சொன்ன அறிவுரைகளால் நான் மதுப்பழக்கத்தை சுத்தமா விட்டுட்டேன். 2 வருஷமாச்சு. ஒரு ஆசானா இருந்து அத்தனை நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தேன்” என்றார் பெருமிதத்துடன்.

         செரினியன், சென்ற இரண்டு வருடங்களாகத் தமிழகத்தில் அலைந்து திரிந்து தப்பாட்டக் கலையினை காட்சிகளாக ஆவணப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக திண்டுக்கல் ‘சக்தி தப்பாட்டக் குழு’வை சேர்ந்த பெண்கள் கம்பீரமாக தப்படித்துக் கொண்டே, தாளம் தப்பாமல் சுழன்று சுழன்று ஆடியதைக் கண்டு இன்னும் சொல்லி வியக்கிறார். அதே நேரம் தப்பாட்டக் கலைஞர்கள் சில பொது நிகழ்ச்சிகள் மற்றும் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளில் தப்பு இசைக்கின்றனர். அந்த வேலை இல்லாத நேரங்களில் கூலி வேலைகளுக்குச் செல்வதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. அரசர்கள் காலத்தில் செய்திகளை பறைசாற்றுவதற்கு பயன்பட்ட இந்த இசை, இன்று தலித் மக்களுக்கான விடுதலையிலும் முக்கியப் பங்காற்றுவது மகிழ்ச்சியான திருப்பம். இப்பேர்ப்பட்ட மகத்தான இசைக்கலைஞர்களுக்கான வாழ்வாதாரம் சிறப்பாக இருக்க வேண்டுமல்லவா? “ என்றார் வருத்தத்துடன்.

          ‘திஸ் இஸ் எ மியூசிக்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் தப்பாட்டக்கலை ஆவணப்படத்தை செரினியன் அமெரிக்காவில் திரையிட்டபோது அங்குள்ள பலரும் இந்த இசையை தாங்களும் கற்றுக் கொள்ள ஆசையாக இருப்பதாகக் கூறி இருக்கின்றனர். குறிப்பாக பெண்கள் தப்படித்துக் கொண்டு ஆடியதைப் பார்த்து பலமாகக் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கின்றனர். மேலும் சமீபத்தில் இத்தாலியில் இப்படத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு திரையிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

          கடந்த டிசம்பர் மாதம் ‘திஸ் இஸ் எ மியூசிக்’ ஆவணப்படத்தை முதன் முதலாக மதுரையில் பிரிவியூ ஷோ போட்டுக் காண்பித்த போது, படத்தில் முக்கியப் பங்களித்த குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழுவினரே சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். வெகு நாட்கள் கழித்து தனது ஆசான்களான தப்பாட்டக் கலைஞர்களை சந்தித்த உற்சாகத்தில் அவர்களுடன் சேர்ந்து தப்பு அடித்துக் கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தார் செரினியன்.

          “அடுத்து நான் எடுக்கப் போகும் ஆவணப்படத்தில் முழுக்க முழுக்க பெண்களே பணிபுரிவார்கள். அது தலித் மக்கள் கலைகளை வெவ்வேறு கோணங்களில் கூறுவதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அந்த ஆவணம் பார்ட்டிசிபேட்ரி வீடியோவாக பதிவு செய்யப்படும்” என்றார் செரினியன். பார்ட்டிசிபேட்ரி வீடியோ என்பது, சம்பந்தப்பட்ட கலைஞர்களே வெவ்வேறு குழுவாகப் பிரிந்து ஒரு பகுதியினர் படத்தை பதிவு செய்வர். மற்றவர்கள் அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பர். “இது போன்ற பங்களிப்பு வீடியோ தயாரிப்பின் மூலம் அவர்களுக்கு எளிய கேமராக்களில் வீடியோ எடுக்க கற்றுக் கொடுப்பதால் மிக எளிய வடிவிலான ஆவணப்படத்தை அவர்களே தயாரிக்க முடியும்” என்கிறார் செரினியன்.

சோயி செரினியனின் மின்னஞ்சல் முகவரி: zsherinian@ou.edu

(*எத்னோ மியூசிக்காலஜி: உலகத்திலுள்ள ஒவ்வொரு இனமும் தங்களுக்கென ஒரு இசையைப் பாரம்பரியச் சொத்தாகப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளது. இசைக்கருவி, ஒலி போன்றவை இடத்துக்கும் மக்களுக்கும் ஏற்றபடி மாறுகின்றன. இப்படிப்பட்ட இசையை அதன் கலாச்சாரப் பின்னணியோடு கற்றுக் கொள்ளும் படிப்பு தான் எத்னோ மியூசிக்காலஜி.)

(நன்றி: புதிய தலைமுறை)

Sunday, January 22, 2012

மக்கள் நலனே மருத்துவர் நலன்!

--------- எஸ்.கார்த்திகேயன் ---------

டாக்டர்  சுப்ரமணியன்
           இந்தியா சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் கூட கிராமப்புறங்களில் மருத்துவ சேவை அரிதான ஒன்றாகத்தான் இருக்கிறது. மருத்துவர்களும் கிராமங்களில் பணியாற்றுவதற்கு விரும்பி முன்வருவதில்லை. அனைவருமே நகரத்தை நோக்கி படை எடுக்க வேண்டிய நிலை. ஆனால், தனது சொந்த கிராமத்தில் நகர மருத்துவமனைகளைக் காட்டிலும் ஹைடெக் மருத்துவமனையைக் கட்டி, தன் மருத்துவ சேவையை தொடர்கிறார் ஒரு மருத்துவர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன் தான் அந்த அபூர்வ மருத்துவர்.

         படிப்பை முடித்துவிட்டு லண்டனில் பணிபுரிந்த போது தமிழ்நாட்டில் அரசு மருத்துவராக பணி நியமனம் கிடைத்திருக்கிறது. சொந்த நாட்டில் பணியாற்ற வேண்டும் என்பதாலேயே லண்டன் பணியைத் துறந்துவிட்டு நாகை மாவட்டத்திலேயே அரசு மருத்துவராக சுமார் 12 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார் சுப்ரமணியன். ஆனால், அங்குள்ள வசதிகளை வைத்துக் கொண்டு தம் மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் மக்களுக்குத் தரமான மருத்துவ சேவையை அளிக்க முடியவில்லையே என்ற மனக்குறை அவருக்கு. அதனால், அரசு வேலையை உதறித் தள்ளிவிட்டு சில ஆண்டு போராட்டங்களைக் கடந்து, தன் கனவு மருத்துவமனையை சமீபத்தில் தன் சொந்தக் கிராமத்திலேயே கட்டியுள்ளார். இவரின் தந்தை, நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து சுதந்திரத்திற்குப் போராடியவர். அப்பாவின் ஆசைக்கிணங்க தன் சொந்த கிராமத்தில் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு ‘நேதாஜி மருத்துவமனை’ எனப் பெயர் வைத்திருக்கிறார் டாக்டர் சுப்ரமணியன்.



          இந்த மருத்துவமனைக்காக மிக அக்கறை எடுத்து இவர் அமைத்திருக்கும் வசதிகள் ஏராளம். ஆபரேஷன் தியேட்டர், தீவிர சிகிச்சைப் பிரிவு, நோயாளிகளுக்கான அனைத்து அறைகளையும் இணைக்கும் ஆக்ஸிஜன் குழாய்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டோமேட்டிக் ப்ளட் டெஸ்ட், அதிநவீன எக்ஸ் ரே, இசிஜி கருவிகள் என்று அனைத்தும் ஒரு மாநகர தனியார் மருத்துவமனைக்கு இணையாக இருக்கின்றன.


         “ஒரு கிராமத்தில் இவ்வளவு பெரிய மருத்துவமனை கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. பல வருடங்களாக நான் சம்பாதித்த பணத்தை வைத்து மருத்துவமனையைக் கட்ட ஆரம்பித்து விட்டேன். சில சிரமங்களுக்குப் பின் இந்தியன் வங்கியில் கடன் கிடைத்தது. ‘இந்தக் கிராமத்துல எல்லா வசதிகளோட இப்படியொரு மருத்துவமனை கட்டுகிறீர்களே, வரவேற்பு இருக்குமா?’ என்று நிறைய பேர் கேட்டார்கள். பெரும்பாலும் கிராமப்புறங்களிலேயே இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவ வசதி சிறப்பானதாகக் கிடைப்பதில்லை. ஓர் அவசர சிகிச்சை என்றால் கூட அவர்கள் நாகப்பட்டிணம் போக வேண்டும். அங்கே பார்க்க முடியாது என்றால், தஞ்சாவூர் போக வேண்டும். இதைக் கருத்தில்கொண்டே இதை 24 மணி நேர எமர்ஜென்சி கேர் மருத்துவமனையாக அமைத்திருக்கிறேன்” என்றார் டாக்டர் சுப்ரமணியன் பெருமையாக.

         இவர் தன்னிடம் இருக்கும் ஒரே கைபேசி எண்ணை தனது குறிப்புச்சீட்டு முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் எமர்ஜென்சி எண் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 24 மணி நேரமும் தன் மருத்துவ சேவையை தங்கு தடையில்லாமல் செய்ய இது உதவியாக இருக்கும் என்பது இவரது எண்ணம்.

         “லேப் டெக்னீஷியன்கள், மருத்துவ சாதனங்களைக் கையாள்வது போன்ற வேலைகளுக்கு என் நட்பு வட்டத்தில் பல பேரிடம் கேட்டேன். கிராமத்திற்கு வந்து வேலை செய்ய யாரும் தயாராக இல்லை. பின், இந்தக் கிராமப் பகுதிகளிலேயே செவிலியர் படிப்புகள் படித்த பெண்களுக்கு வேலை கொடுத்து, அதி நவீன சாதனங்களைக் கையாள்வதற்கு நானே பயிற்சி அளித்தேன். அதற்கான வரைமுறைகள் அனைத்தையும் தெளிவாக எழுதி அவர்களிடம் கொடுத்திருப்பதால், திறமையாக வேலையைச் செய்து முடிக்கிறார்கள். அதோடு, கிராமத்து மக்கள் நெஞ்சு வலி போன்ற அவசர சிகிச்சை என்றால் நேராக இங்கு வருவார்கள். முதலில் நாங்கள் சிகிச்சை தான் அளிப்போம். அந்த தருணத்தில் பணத்தை உடனே கட்டுங்க என்றெல்லாம் நிர்பந்திக்க மாட்டேம். அவர்கள் நன்கு குணமாகி வீட்டிற்குச் சென்றபின் கூட சிகிச்சைக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறோம்” என்கிறார் இவர்.

அண்ணா.பாலகுமார்
          “சுப்ரமணியன் டாக்டர் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் போதே இப்பகுதி மக்களிடையே அவரது அக்கறையான சிகிச்சை ரொம்ப பிரசித்தம். இப்ப சொந்தக் கிராமத்திலேயே பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறார். சுத்தி இருக்கிற கிராமத்து மக்கள் எல்லாரும் அங்க போறாங்க. நவீன வசதிகள் இருந்தாலும் இப்பகுதிகளில் இருக்கிற மற்ற டாக்டர்கள் வாங்குற ஃபீஸ்தான் வாங்குறார்” என்றார், செம்போடை கிராமத்தைச் சேர்ந்த அண்ணா.பாலகுமார்.

         பொதுவாக, கிராமங்களிலிருந்து மருத்துவ உதவி பெற நகரங்களுக்குத் தான் போவார்கள். டாக்டர் சுப்ரமணியன் மருத்துவமனையை இங்கே அமைத்த பிறகு, பக்கத்து நகரங்களிலிருந்தும் கூட இந்தக் கிராமத்தைத் தேடி நோயாளிகள் வர ஆரம்பித்திருப்பது ஓர் ஆச்சர்யமான இனிய மாற்றம்.

(டாக்டர் சுப்ரமணியத்தின் ‘எமர்ஜென்சி’ கைபேசி எண்: 94426 49959)

(நன்றி: புதிய தலைமுறை)

உணவு(உழவர்) சந்தை

---------- எஸ்.கார்த்திகேயன் ----------


'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது’ என்பார்கள். ஆனால், ஓட்டல் வைத்தால்? தாங்கள் உற்பத்தி செய்த உணவுத் தானியங்களை  மதிப்புக்கூட்டி விவசாயிகள் சமைத்தும் விற்கிறார்கள் மதுரையில். மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் முயற்சியினால் உருவான இந்த உழவன் உணவகம், மதுரை நாராயணபுரத்தில் அமைந்துள்ளது. அமோகமாக விற்பனையாகிறது.

இன்றைய நிலையில் பீட்ஸா,  பர்கர் போன்ற கலோரி அதிகமுள்ள துரித உணவுகள் இளைய தலைமுறையினரை நோயாளிகளாக்கி அவர்களது சராசரி வாழ்நாளை குறைத்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்  என்கிற நோக்கத்தில்தான் இந்த உழவன் உணவகம் ஏற்படுத்தப்பட்டது.  இங்கு தனித்தனி  ஸ்டால்கள் வைத்திருக்கும் உழவர்கள், தாங்கள் விளைவித்த சிறுதானியங்களை தாங்களே சமைத்து விற்கிறார்கள். இதனால், இடைத்தரகர்கள், விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமை போன்ற பிரச்சினைகள் கிடையாது.  உழவர்கள் பகலில் உழவுப் பணிகளைச் செய்வதால் மாலை 5 மணியிலிருந்து இரவு வரை உழவன் உணவகம் இயங்குகிறது.

பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, தினை, வரகு போன்றவற்றை சாதாரணமாக சமைத்து விற்றால் யாரும் அதனை தற்போது விரும்ப மாட்டார்கள். ஆகையால், மதுரை தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரியில் இருந்து விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பாரம்பரிய உணவு வகைகளை மதிப்புக் கூட்டி சிறுதானியங்கள் மற்றும் மூலிகை உணவு வகைகளை மக்கள் விரும்பும் வகையில் சுவையாக விதவிதமான உணவுப்பொருட்களாக தயாரிக்கக் கற்றுத் தரப்படுகிறது. உதாரணமாக தினையில் பணியாரம், சேவு,அப்பம்; கம்பில் சீவல், கம்பங்கஞ்சி; வரகு அரிசியில் பொங்கல்,பிரியாணி, அதிரசம்;  சிறுதானியங்களில் முடக்கு அறுத்தான் தோசை, முள் முருங்கை தோசை, செம்பருத்தி இட்லி; குதிரைவாலிப் பொங்கல்; அத்திப்பழ அல்வா என நீண்டுகொண்டே செல்கிறது உழவன் உணவகத்தின் மெனு.


"சாதாரண கூலித் தொழிலாளி முதல் பணக்காரர்கள் வரை பல்வேறு தரப்பினர் இங்கு வர்றாங்க. அவங்க உடல் ஆரோக்கியத்திற்கு இந்த உணவு வகைகள் சிறந்தது என எண்ணுகிறார்கள். உணவுப் பொருட்களின் விலையும் குறைவானதாகவே விற்கிறோம். மதுரைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் நம் தமிழக பாரம்பரிய உணவு வகைகளை விரும்பிச் சாப்பிட்டு விட்டு தங்கள் நாடுகளுக்கும் வாங்கிச் செல்கின்றனர். மேலும் இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன் போன்ற நாடுகளுக்கும் உழவன் உணவகத்திலிருந்து குறிப்பிட்ட சில ஆர்டரின்பேரில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செஞ்சிருக்கோம். இங்கு சாப்பிட வரும் இக்கால தலைமுறையினர், ‘நாங்க இப்படி ஓர் உணவு வகைகளை பார்த்ததே இல்லை’ என்கின்றனர்.

சமீபத்தில் கலெக்டர் தலைமையில் மதுரை மாவட்ட அளவிலான பேங்கர்ஸ் மீட்டிங் நடந்தபோது, சோள பிஸ்கெட், தினைச் சேவு போன்ற உழவன் உணவகப் பொருட்கள் பரிமாறப்பட்டன. வங்கி அலுவலர்களிடம் அவை மிகுந்த வரவேற்பையும் பெற்றன. அதனால் தலைமை வங்கி அதிகாரி, இனி வங்கி சம்பந்தமான மீட்டிங் நடந்தால் உழவன் உணவகப் பொருட்களை வாங்குங்க என்று மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் மெயிலில் அறிவுறுத்தினார். மொத்தத்தில் விவசாயிகளுக்கு ஒரு வாழ்வாதாரமாக விளங்கும் உழவன் உணவகம் மக்களுக்கு விலை குறைவான, தரமான பாரம்பரிய உணவு வகைகளும் வழங்குகிறது..." என்றார், உழவன் உணவகத்தை நிர்வகித்துவரும் மதுரை வேளாண் விற்பனைத் துறை அலுவலர் ஆறுமுகம்.

தனலட்சுமி

வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தியான தனலட்சுமி  வறுமையில் வாடியதை அறிந்த கலெக்டர் சகாயம், அவருக்கு உழவன் உணவகத்தில் ஸ்டால் அமைக்க உதவியுள்ளார்.    "வறுமையில் வாடிக்கொண்டிருந்த என்னை அழைத்து வந்து பயிற்சியெல்லாம் அளித்து, உழவன் உணவகத்தில் ஒரு தொழிலை வைத்துக் கொடுத்தனர். இந்த வயதிலும் நான் சுயமாக சம்பாதிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 1,000 ரூபாய் வருமானம் வருகிறது. உழவன் உணவகம் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை அளித்துள்ளது" என்றார் தனலட்சுமி.

சகாயம், மதுரை மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் கூறுகையில், "இந்த முயற்சி நான் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோதே நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய நகரங்களில் விவசாயிகளை மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயார் செய்பவர்களாகவும் விற்பனை செய்பவர்களாகவும் பயிற்சி அளித்து செயல்படுத்தினோம். அங்கு உழவன் உணவகம் தொடங்கிய 11 மாதங்களில் ஏறக்குறைய 1 கோடியே 60 லட்சத்திற்கு விற்பனையானது. அப்போது 3 விவசாயிகள் கார் வாங்கியது குறிப்பிடத்தக்கது. நீண்ட நெடுங்காலமாக நம் தமிழ்ச் சமூகம் சாப்பிட்டு வந்த சத்தான, பாரம்பரிய உணவுகளை இன்று விவசாயிகள் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு அளித்து வருகிறார்கள். மேலும் மதுரையில் பல்வேறு இடங்களில் உழவன் உணவகம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

மதுரையில் உழவன் உணவகம் அமைக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2 வருடங்களுக்குமுன் சகாயம், நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது, அங்கு ஆரம்பித்து நன்றாகச் செயல்பட்டு வந்த உழவன் உணவகம் தற்போது மூடப்படும் நிலைமையில் உள்ளது. உழவன் உணவகம் என்ற இத்தகைய நல்ல திட்டத்தை அரசு, தமிழக அளவில் செயல்படுத்தினால் உழவர்கள் வாழ்வும் செழிக்கும்.  அழிந்து வரும் நம் பாரம்பரிய உணவு வகைகளை கல்விக் கண்காட்சிகளில் காட்சிப் பொருள்களாக மட்டுமே பார்க்கும் அவல நிலையும் மறையும்.

(நன்றி: புதிய தலைமுறை)