Tuesday, February 12, 2013

பாலு மகேந்திராவின் வீடு



     எளிமை வறுமை அல்ல, மாறாக அது தான் கம்பீரம் என்று அடிக்கடிச் சொல்வார். அந்த கம்பீரமான படைப்புகளுள் ஒன்றானவீடுதிரைப்படம் இன்று பார்த்தோம். தாய் மடியில் இளைப்பாற எந்தக் குழந்தையும் விரும்பாமல் போகாது. அன்று வீடு என்ற கரு பிரசவித்த அதே வீடு தான் இன்று 4 வயதாகும் குழந்தையாக சினிமா பயிற்சிப் பட்டறையாக உருப்பெற்றிருக்கிறது. இது வெகு சிலர் அறிந்த விஷயம். வீடு படம் எடுப்பதற்காகவே கட்டப்பட்ட அந்த வீடு பின்னாளில் தனது சினிமாப் பயிற்சிப் பட்டறையாக மாறும் என அவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அதை, இயக்குனர் சாந்தாரமின் ஸ்டூடியோ பின்னாளில் புனே திரைப்படக் கல்லூரியாக மாறியது போல தான் இதுவும் என சிலாகிப்பார் அந்த சத்தியஜித் ரே-வின் மாணவர் பாலு மகேந்திரா.

  வாடகை வீட்டில் குடியிருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்டி குடிபோக வேண்டும் என்பது இயல்பான ஆசை. அப்படி சொந்த வீடு கட்டும் போது அதற்கு அவர்கள் படும் இன்னல்களை எவ்வித அலட்டல்களும் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட காவியமே வீடு. 1987-ல் வெளியான படம். அன்றைக்கும் இன்றைக்கும் நடுவில் பணத்தின் மதிப்பு மட்டுமே மாறியிருக்கிறது தவிர சொந்த வீடு கட்ட படும் பாடு மாறாமல் அப்படியே உள்ளது. ஆதலால் இன்னும் எத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் இப்படம் ஒரே தன்மையிலேயே இருக்கும். பல வருடங்கள் கழித்து நடக்கவிருப்பதை முன்கூட்டியே தன் எழுத்திலேயே வடிக்கும் சுஜாதாவின் ஆற்றலைப் போல் அவரின் நெருங்கிய நண்பரான பாலு மகேந்திராவும் அந்த தீர்க்கதரிசனத்தை அப்போதே தன் வீடு படைப்பில் புதைத்து வைத்திருக்கிறார்.

   வேலை செய்து தன் தங்கையையும், தாத்தாவையும் பார்த்துக் கொள்ளும் பெண். அவளிற்காக எதையும் இழக்கத் தயராக இருக்கும் வருங்கால கணவனாகப் போகும் காதலன். அவர்கள் ஆதரவுடன் கடன் வாங்கி ஆசை ஆசையாக வீடு கட்ட ஆரம்பிக்கிறாள். கட்டிட அனுமதி வாங்க அரசு அலுவலகத்தில் லஞ்சம். அலுவலகத்தில் கடனின் இரண்டாம் பாதி தொகையை வாங்க மானம் மாற்றுப் பொருளாக கேட்கப்படுகிறது. கட்டுமான பொருட்களில் பணக்கார இன்ஜினியர் செய்யும் திருட்டு. இதற்கு நடுவில் பணத்தட்டுப்பாடு,பாசப் போராட்டம் என இயல்பு வாழ்க்கை அப்படியே பிரதிபலிப்பது தவிர்க்க முடியாதது. தன் இயலாமையில் பெண் அழுவாள், ஆனால் அதன் பின்னர் ஒரு ஆணைக் காட்டிலும் பெண்ணிற்கு மன தைரியம் அதிகமாகவே வெளிப்படும். அது  அர்ச்சனா நடித்த கதாபாத்திரத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என தெளிவாகவே  தெரியப்படுத்தப்பட்டிருக்கும். சொக்கலிங்க பாகவதர் என் பக்கத்து வீட்டு தாத்தா போல் இருக்கிறாரே என்று சொல்லும் அளவிற்கு படத்தில் வாழ்ந்திருப்பார். பாதி கட்டி முடிக்கப்பட்ட வீட்டின் ஒரு ஓரத்திலுள்ள சுவரை ஆசையாக பார்த்து தொட்டுத் தடவி ரசிப்பார்.(அந்த சுவற்றிற்கு அருகில் அமர்ந்து படத்தைப் பார்க்கும் போது புன் முறுவலுடன் கூடிய சிறு துளி கண்ணீரை தவிர்க்க முடியவில்லை). வளரும் குழந்தையை அணுணுவாக ரசிப்பதுக்கு ஒப்பானது தான் அதுவும். வியர்வையும், குருதியும் சிந்தி உழைத்து சொந்த வீடு கட்டுவோர் அதை அனுபவித்திருப்பர்.

  அவள் வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்து கடைசி வரை இன்னல்களை மட்டுமே அனுபவிக்கிறாள். இறுதியில் முதலுக்கே மோசம் வருவது போல் பாதி கட்டப்பட்ட அந்த வீட்டிற்கும் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் வடிவில் ஆபத்து வருகிறது. ஆனால் அவள் மட்டும் நம்பிக்கை இழக்கவே மாட்டாள்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த சுவற்றிற்கு அருகில் அமர்ந்து படத்தைப் பார்த்த தாங்கள் கொடுத்து வைத்தவர்...

மறக்க முடியாத உண்மை காவியம்...

எஸ்.கார்த்திகேயன். (S.Karthikeyan.) said...

Unmai sir...

Unknown said...

‘வீடு’ மட்டுமல்ல.. பாலு மகேந்திராவின் படைப்புக்கள் அத்தனையுமே போற்றுதலுக்குரியவை! அவரைப் போலவே.. ஆம்.. அழியாத கோலங்கள்..

Unknown said...

சி.என்.இராமகிருஷ்ணன்

‘வீடு’ மட்டுமல்ல.. பாலு மகேந்திராவின் படைப்புக்கள் அத்தனையுமே போற்றுதலுக்குரியவை! அவரைப் போலவே.. ஆம்.. அழியாத கோலங்கள்..
March 7, 2013 at 10:57 AM

Post a Comment