Friday, July 15, 2011

ஸ்பைடர் உமன்!

- எஸ்.கார்த்திகேயன் -

                                               ஜெயபாரதி.                                படம்: கா.கே

”வீடுகளின் மூலை முடுக்குகளில் படிந்திருக்கும் ஒட்டடையைச் சுத்தம் செய்யும்போது , சிலந்திகளையும் சேர்த்து துடைத்து எடுத்து அப்புறப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், கொசுக்களைக் கட்டுப்படுத்துவதே சிலந்திகள்தான். அவற்றின் மூலம் நமக்கு நன்மையே ஏற்படுகிறது” என்கிறார் டாக்டர் ஜெயபாரதி. இவர் சிலந்திகள் மற்றும் அவை பின்னும் வலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விலங்கியல் துறை பேராசிரியை.

     மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ‘பெண் விஞ்ஞானிகள் திட்டம்’ மூலம் தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் செய்யும் ஆராய்ச்சிக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபாரதி சிலந்தி வலையின் உயர் இயந்திரவியல், மூலக்கூறு, வேதியியல் தன்மை ஆகியன பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரது ஆராய்ச்சிக்கு மத்திய அரசு 22 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

    “மருத்துவத்துறையில் மிக நுண்ணிய பகுதிகளில் ஆபரேஷன் செய்யும்போது, தையல் போடுவதற்கும், பேண்டேஜ் தயாரிப்பிலும் சிலந்தி வலை பயன்படுத்தப்படுகிறது. அத்லெடிக் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் துணிகள் தயாரிப்பிலும் இந்த வலைகள் பயன்படுகிறது. ஒன்றரை மீட்டர் வரை வலை பின்னக் கூடிய நெஃபிலா என்ற சிலந்தியின் வலை பாராசூட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. நானோ டெக்னாலஜியில் சிலந்தி வலை முக்கியப் பங்கு வகிக்கின்றன. விவசாயத்திலும் சிறந்த பங்காற்றுகிறது” சிலந்தி வலையினால் இத்தனை பயன்களா என்று வியக்கத்தக்க அளவுக்கு அதன் பயன்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.

    சிலந்தியின் ஜீனையும் பட்டுப் புழுவின் ஜீனையும் இணைத்து இவர் செய்யும் ஆராய்ச்சி முக்கியமானது.

    “சிலந்திகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கு. அப்படியே கண்டுபிடிச்சாலும் அவற்றை ஆராய்ந்து அதன் வகைகளைக் கண்டறியணும். அது பின்னும் வலைகளின் தன்மை பற்றி ஆராயணும்.

    ஒரே மாதிரியான டி.என்.ஏ மற்றும் புரோட்டீன்களைக் கொண்ட சிலந்தி மற்றும் பட்டுப் புழுவின் ஜீன்களை இணைத்து புது வகையான சிலந்தி அல்லது பட்டுப் புழுவை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறேன். அவ்வாறு ஒரே மாதிரியான ஜீன்கள் கொண்டவைகளைக் கண்டு பிடிக்கறதுல சற்று சிரமம் இருக்கு. ஏறத்தாழ 4000 வகையான சிலந்திகள் கண்டறியப்பட்டுள்ளன. எவரெஸ்ட் சிகரத்தின் 23 அடிகளில் கூட சில அரிய வகை சிலந்திகள் உள்ளன. நான் தற்போது 29 வகையான சிலந்திகளை சேகரித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். அவற்றுள் முக்கியமானது சில்வர் கார்டன் ஸ்பைடர்.

    சிலந்தி மற்றும் பட்டுப் புழுவின் ஜீனை இணைப்பதால் ரீ காம்பினெண்ட் சில்க் கிடைக்கிறது. தற்போதுள்ள பட்டுப் புழுக்களால் கிடைக்கும் நன்மைகளைக் காட்டிலும் புதுமையாக உருவாக்கப்படும் இந்த உயிரினத்தின் மூலம் பட்டு நூல் உற்பத்தியை அதிகரிக்கலாம். பட்டுப் புழுவின் ஜீனை இணைத்து புதுமையாக உருவாக்கப்படும் சிலந்தியும் நூல் உற்பத்தியில் பல்வேறு நன்மைகளைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு உருவாக்கப்படும் நூல் தற்போது பயன்படுத்தப்படும் நூல்களைக் காட்டிலும் உறுதியாக இருக்கும்” என்றவர் தொடர்ந்து, “தற்போது விவசாயத் துறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள் விவசாயிகள். அது தேவையே இல்லை” என்றவர் தொடர்ந்து,

     “சிலந்தியின் ஒரு முட்டையில் 500 எண்ணிக்கையிலான சிலந்திகள் உருவாகும். அவற்றை வயல் வெளிகளில் விட்டால் சிலந்திகளின் எண்ணிக்கை பெருகும். பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிலந்திகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிலந்திகள் மிகச் சிறிய பூச்சி முதல் வெட்டுக்கிளியைக் கூட அழித்து விடும். பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் வலை பின்னாத சிலந்திகளே முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றிற்கு ‘பயாலஜி கண்ட்ரோல் ஏஜெண்ட்’  என்று பெயர். பூச்சிகளை அழிக்க சிலந்திகளைப் பயன்படுத்துவதும் இயற்கை விவசாயத்தில் ஓர் உத்திதான்.” என்றார்.

     இவரது ஆராய்ச்சி அனுபவத்தின் மூலம் கண்டறிந்த சிலந்தி வகைகளைப் பற்றி புத்தகம் ஒன்றையும் ஜெயபாரதி எழுதிக் கொண்டிருக்கிறார்.

     “சிலந்தி வலை ஆராய்ச்சி இந்தியாவில் குறைவாக உள்ளது. எனக்கே ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் சரியாகக் கிடைப்பதில்லை. ஆனாலும் என்னால் முடிந்த அளவு முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். எத்தனை முறை வலை அறுந்தாலும் சிலந்தி உடனே அதைப் பின்னி விடும். அதுபோல எத்தனை தடைகள் வந்தாலும் விடா முயற்சியுடன் எனக்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். எனது ஆராய்ச்சி எதிர்காலச் சந்ததியினருக்கு சிறிதளவேனும் உதவும் என நம்புகிறேன்...” என்று தன்னடக்கத்துடன் சொல்கிறார் ஜெயபாரதி. 

‘பெண் விஞ்ஞானிகள் திட்டம்’ பற்றி தெரிந்து கொள்ள: www.dst.gov.in/scientific-programme/women-scientists.ht

(நன்றி: புதிய தலைமுறை)

Sunday, July 10, 2011

அரசியல் வியாபாரம்!

பொன்னி .. ஒரு சொம்பு தண்ணி எடுத்தாம்மா.....

’இந்தா வாறேன்ப்பா’......

வீட்டு வாசலில் உள்ள கல்லில் அமர்ந்து பல் துலக்கிக் கொண்டிருக்கிறார், முனுசாமி.

என்னைய்யா இன்னும் வேலைக்குக் கிளம்பலையா? என்று கேட்டுக் கொண்டே வருகிறான் கருவாயன்.

இல்லைய்யா, முருகன் கொத்தனார் ஒரு வாரம் வேலை இல்லைனுட்டாரு. டவுண்காரப் பயலுகலும் வேலைக்கு கூப்பிட மாட்டேங்கிறாய்ங்க. என்ன செய்யுறதுனு தெரியாம உட்காந்துக்கிட்டிருக்கேன்.

’இந்தாங்கப்பா தண்ணி’....

தண்ணீரைக் கொடுத்து விட்டு, வாசலில் கிடந்த பாத்திரங்களை துலக்குவதற்கு அமர்ந்து விட்டாள் பொன்னி.

காலைல 10 மணிக்கு  உட்காந்து பல்லு விலக்கும் போதே தெரியுது, நீரு  சும்மாதான் இருக்கீர்னு. சாயங்காலம் ஒரு இடத்துக்கு வர்றீரா? சம்பளம் 250 ரூபா கிடைக்கும், சும்மா உட்கார்ந்திருந்தா போதும் என்கிறான் கருவாயன்.

அதென்ன வேலைய்யா, சும்மா உட்கார்ந்திருக்குற வேலை?

அது ஒண்ணுமில்ல, டவுண்ல எதிர்க்கட்சிக்காரங்க மாநாடு நடத்துறாங்க, அதுல கலந்துக்கத்தான் 250 ரூபா. நாள மறுநாளு ஆளுங்கட்சிக்காரங்க மாநாடு நடக்குது, அதுல கலந்துக்கிட்டா 500 ரூபா தர்றாங்க. சாயங்காலம் நான் போறேன், நீரு வர்றீரா?

’இல்லையா, நான் வரலை’....

பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீரே, ‘வாழப் பழத்த உரிச்சு தான் தர முடியும் ஊட்டியுமா விட முடியும்’

சாயங்காலந்தானே மாநாடு, நான் யோசிச்சி சொல்றேன்.

அப்பா, குளிக்கிறதுக்கு வெந்நீரு வைக்கவா? என்கிறாள் பொன்னி.

இல்லம்மா, பச்ச தண்ணிலயே குளிச்சிக்கிறேன்.

பொன்னியோட அம்மா போனதுக்கு அப்புறம், இவளுக்காக தான் இன்னும் உசுரோட இருக்கேன். நல்லா படிக்க வைக்கிறதுக்கும் வசதியில்ல. ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்திட்டா நானும் நிம்மதியா போய்ச் சேர்ந்திருவேன்.

சரி.. சரி.. பழசெல்லாம் எதுக்கு? விடய்யா. நான் சாயங்காலம் 4 மணி போல வர்றேன் என்று கூறி விட்டுக் கிளம்பினான் கருவாயன்.

அப்பா, கூரையெல்லாம் பழசாயிருச்சு, ஒரே செத்தையா இருக்கு, மழையடிச்சா ஒழுகுது. புதுக் கூரை மாத்தணும்ப்பா.

நீ உண்டியலில கொஞ்சம் பணம் சேர்த்து வைச்சிருந்தேலம்மா, அதை எடுத்து வை, நான் குளிச்சிட்டு வர்றேன் என்கிறார் முனுசாமி.

பொன்னி, அந்த பணத்தை கொண்டு வா, கடை வரைக்கும் போகணும்.

புதுக் கூரைங்க வாங்கவாப்பா?

மெளனத்துடன் நகர்கிறார் முனுசாமி.

கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய முனுசாமி, ஒரு பை நிறைய சில திண்பண்டங்களுடன் வீட்டினுள் நுழைகிறார்.

’என்னப்பா’ இவ்வளவு பண்டங்கள், யாரும் விருந்தாளிங்க வர்றாங்களா?

பொன்னியின் கேள்விக்கு பதில் ஒன்றும் கூறாமல் வந்த களைப்பில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார் முனுசாமி.

சாயங்காலமாச்சு! விருந்தாளிகளும் யாரும் வர்ற மாதிரி தெரியலை. அப்பா வாங்கியாந்த பண்டங்களெல்லாம் அப்பிடியே இருக்கு.... என்று புலம்பிக் கொண்டே இருந்தாள் பொன்னி. அப்போது அங்கு வந்த கருவாயன், பொன்னி உங்க அப்பாவைக் கூப்பிடு, மாநாட்டுக்கு வர்றாரா இல்லையான்னு கேளு? என்றான்.

வேறு வழியில் வருகிறேன், என்கிறார் முனுசாமி.

என்னத்தையா சொல்றீரு, ஒன்னும் விளங்க மாட்டிக்குது என்றான் கருவாயான்.

பொன்னி, அந்த தின்பண்டங்களை எல்லாம் எடுத்தாம்மா...

இந்தாங்கப்பா..... அப்பா இதெல்லாம் யாருக்கு?

டவுண்ல கட்சி மாநாடு நடக்குதுல, அங்க கூட்டம் நெறையா வரும், இந்த பண்டங்கள் எல்லாம் அங்க கொண்டு போய் விக்கிறதுக்குத் தான் என்று கூறி விட்டுக் கிளம்பினார் முனுசாமி.

நின்று கொண்டிருந்த கருவாயன் எதுவும் பேசாமல் வெடுக்கென்று கிளம்பி விட்டான்.

கட்சி மாநாட்டில், ’தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க’ என்று கத்திக் கொண்டிருந்தான் கருவாயன். 

’தன் தின்பண்டங்களின் பெயர்களை வாய் வலிக்க '.............. கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார் முனுசாமி.