Saturday, November 12, 2011

கண்மொழி!


நம் கண்கள் இமைச் சிறைகளுக்குள்
அடைபட விரும்பவில்லை
அனைவரும் தூங்கியபின் நம் கண்கள் மட்டும்
இரகசியங்களைப் பரிமாறுகிறது வெகு நேரமாக
இரகசியங்கள் வெளிப்படுமோயென சிறைவாசம்
செல்ல எத்தனிக்கிறது என் கண்கள்
அட பைத்தியமே, நம் கண்கள் பேசும்
மொழியை நம்மையன்றி யாரறிவார் என
செல்லச் சிணுங்கல் போடுகிறது அவள் கண்.

Friday, November 11, 2011

சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேருது!

--------- எஸ்.கார்த்திகேயன் --------


’குழந்தைகள் எதிர்காலத்தின் பிரதிநிதிகள்’ என்றார் ஜவஹர்லால் நேரு. அந்தப் பிரதிநிதித்துவத்தை அவர்களின் சிறு பருவத்திலிருந்தே வளர்ப்பது நம் கடமை. அதற்கு ஏட்டுக் கல்வி மட்டுமே போதுமானதாக அமையாது. சமூகம் சார்ந்த பணிகளில் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதனால் அவர்களின் பல்நோக்குத் திறன்கள் அதிகரிக்கும். இந்தக் குறிக்கோளை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது, மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட பங்கேற்பு கற்றல் ஆதார மையம்” (RCPDS - Resource Center for Participatory Development Studies) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகளுக்கான ஆக்கப் பணிகளைச் செய்து வருகிறது இந்த அமைப்பு.

சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, களப்பணிகள், குழந்தைகளுக்கான உரிமைகள், வாழ்க்கைக் கல்வி என ஆர்.சி.பி.டி.எஸ் தன் ஒவ்வொரு சமூகப் பணிகளையும் இலக்குகளை குறி வைத்து தனி இயக்கங்களாக நடத்தி வருகிறது. அதன் கதாநாயகர்கள் அனைவருமே குழந்தைகள் என்பதுதான் சிறப்பம்சம். கலந்தாலோசித்தல், திட்டமிடுதல், திட்டங்களை செயல்படுத்தல்  அனைத்தும் குழந்தைகள் கையில். அவர்களுக்கு உதவி புரியும் ஒரு கருவியாக மட்டுமே ஆர்.சி.பி.டி.எஸ் இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு உதவியாக ஒவ்வொரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்களும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கின்றனர்.

தட்பவெப்ப மாற்றங்கள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும் செயற்கை விவசாயம், அடிப்படை உணவுப் பாதுகாப்பின்மை போன்றவைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது எதிர்கால தலைமுறைகளான குழந்தைகளே. இதை கருத்தில் கொண்டு, விருதுநகர் அருகே திருச்சுழியில் தட்பவெப்ப மாற்ற நீதிக்கான குழந்தைகள் இயக்கம்ஆர்.சி.பி.டி.எஸ் சார்பில் இயங்குகிறது. குழந்தைகளே நடத்தும் பாலர் பஞ்சாயத்தும்இதனுடன் இணைந்தவை. குழந்தைகள் அவர்களுக்குள்ளாகவே தேர்ந்தெடுத்த தலைவர் பாலர் பஞ்சாயத்தை நிர்வகிக்கிறார். இதன் சார்பில் இயற்கை வேளாண்மை கற்றல் மையம்இயங்குகிறது. பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளே விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். உள்ளூர் பஞ்சாயத்து சார்பில் அக்குழந்தைகளின் அடிப்படை இயற்கை விவசாயக் கற்றலுக்காக 10 ஏக்கர் பரப்பளவிலான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.சி.பி.டி.எஸ் உதவியுடன் அந்த நிலத்தை உழுது விவசாயத்திற்கு உரிய நிலமாக மாற்றிய பெருமை பாலர் பஞ்சாயத்தைச் சார்ந்த குழந்தைகளையே சாரும்.

நிலத்திற்கு உரமிடுகிறார்கள்

பாரம்பரிய விதைகளான சாமை, வரகு, திணை போன்றவைகளையே பயிரிடுகின்றனர். பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகாவ்யா பயிர்ஊக்கி (பசுஞ்சாணம், பசு மூத்திரம், பால், தயிர், நெய் ஆகியவைகளின் கலவை) போன்ற இயற்கை உரங்களையே பயிர்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குழுவிலிருந்து வந்து ஒருவர், இக்குழந்தைகளுக்கு சில பயிற்சிகளை அளித்துள்ளார். இயற்கை விவசாயம், நில நீர் மேலாண்மை போன்றவைகளின் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார். வறட்சிப் பகுதியாக அறியப்படும் விருதுநகருக்கு உகந்ததான, நில நீர் மேலாண்மை பயிற்சி குழந்தைகளின் விவசாயத்திற்கு பெரிதும் கைகொடுத்துள்ளது.
பயிற்சியில் மாணவர்கள்
ஜான் தேவாரம்

இது பற்றி ஆர்.சி.பி.டி.எஸ். தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஜான் தேவாரம் கூறுகையில், “குழந்தைகளின் பன்முகத் திறன் வளர்ப்பே எங்களின் முக்கிய நோக்கம். பள்ளிகளில் வாழ்க்கைக் கல்வியை கற்றுத் தருவதில்லை. ஆகவே, அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் களப்பணிகள் குறித்த பயிற்சியில் அவர்களாகவே வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக் கொள்கின்றனர். அதனால் அவர்களின் உரிமைகளைக் காக்க அவர்களே போராடுகிறார்கள். மேலும் மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கும் இயற்கை விவசாய முறைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும், நாளைய வேளாண்மையும் சிறக்கும்” என்றார் புன்னகையுடன்.
(நன்றி:புதிய தலைமுறை)

Thursday, November 3, 2011

முரண்


சுதந்திர இந்தியாவின்
தேசிய விலங்கு
இந்திரா காந்தி மிருகக்காட்சி சாலையில்