Tuesday, October 18, 2011

50/50 - ஹைக்கூ!


“உலகம் சுற்றும்போது” 
எடுத்த “புகை”ப்படம்!

Monday, October 17, 2011

யாரவள்!


சூரியனும் ஒரு நொடி திகைத்து விட்டது
கரையினில் நிற்கும் நிலவைப் பார்த்து!                                                                      
நம்மை விட இப்படி ஓர் அழகியா? என                                                                            நாணி முகம் சிவந்து மறைகிறது                                                                   நங்கையவளை எதிர் கொள்ள முடியாமல்!

அலைகளின் ஆசையோ நிராசை தான்
அவளின் பாதங்களை மட்டுமே தழுவ முடிகிறது
அதுவும் சில நொடி இடைவேளைகளில்!

அவளது துப்பட்டாவையேனும் சொந்தமாக்க
அவா கொள்கிறது காற்று!

Sunday, October 16, 2011

ஹெலிகாப்டர் 007

  ----------- எஸ்.கார்த்திகேயன் ------------

 
        வெகு தொலைவில் இருந்து கொண்டே வீடியோவின் உதவியால் ஓர் அலுவலகத்தையே நிர்வகிக்க முடியுமா? திருடு போய் எங்கேயோ ஓடிக் கொண்டிருக்கும் ஒரு காரை உட்கார்ந்த இடத்திலிருந்தே பின்தொடர்ந்து அது சென்று சென்று கொண்டிருக்கும் சாலையைக் கண்டறிய முடியுமா? முடியும் என்கிறார்கள் விருதுநகர் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள்.

     சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள, ‘நேஷனல் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்’ எனும் நிறுவனம் தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கு உலக அளவிலான போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்துவரும் சாலை ஜெயசீலன் மற்றும் மோகனப்பிரியா என்ற மாணவர்கள் கூட்டாகச் சமர்ப்பித்த , ‘லேப்வியூ கண்ட்ரோல்டு ரிமோட் சர்வைலன்ஸ் ஆர்சி ஹெலிகாப்டர்’ என்ற ஆய்வுக் கட்டுரை மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இவர்கள் எழுதியுள்ள கட்டுரை , ரிமோட் சர்வைலன்ஸ் ஆர்சி ஹெலிகாப்டர் பாதுகாப்புப் பணிகளை மையமாகக் கொண்டது. அதாவது, வயர்லெஸ்ஸை அடிப்படையாகக் கொண்டு கேமரா பொருத்தப்பட்ட சிறிய வடிவிலான ஹெலிகாப்டரை கம்ப்யூட்டர் மூலம் இயக்கி, உளவுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு ரேடியோ அலைக்கற்றைகள் உதவுகின்றன.

ஹெலிகாப்டரை இயக்கும் பேனல்
ஹெலிகாப்டரில் இருந்து பெறப்படும் வீடியோ

     இந்த ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கு வந்தால் தற்போது அலுவலகங்களில் ஆங்காங்கே பொருத்தப்பட்டு , கண்காணிப்புப் பணிகளைச் செய்யும் கேமராக்களின் வேலையை இந்த ஒரே ஹெலிகாப்டர் செய்து முடித்துவிடும். செலவும் குறைவு.

     இந்தத் தொழில்நுட்பத்தின்படி கம்ப்யூட்டரிலிருந்து கொடுக்கப்படும் கட்டளைகளின் அடிப்படையில் ஹெலிகாப்டர் இயங்கும். அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவு செய்யும் வீடியோக்களை ஆர்.எஃப்.(Radio Frequency) டிரான்ஸ்மிட்டர் மூலம் தொடர்ந்து கம்ப்யூட்டருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். கேமரா மூலம் கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும் வீடியோ பதிவே ஆளில்லாமல் ஹெலிகாப்டரை இயக்க கண் போன்றிருந்து உதவுகிறது. “இதன் மூலம் வெகுதொலைவில் இருந்து கொண்டே வீடியோவின் உதவியால் ஓர் அலுவலகத்தையே நிர்வகிக்கலாம். மேலும் திருடு போகும் காரினை அமர்ந்த இடத்திலேயே இருந்துகொண்டே இந்த ஹெலிகாப்டரின் உதவியால் பின்தொடர்ந்து அது சென்று கொண்டிருக்கும் பாதையை அறிந்து போலீஸாருக்கு துப்பு கொடுக்கலாம்” என்கிறார்கள் இந்த மாணவர்கள். 

மோகனப்பிரியா
ஜெயசீலன்
     சாலை ஜெயசீலன் கூறுகையில், “முக்கியமாக பாதுகாப்பிற்கு உதவும் நோக்கிலேயே இந்த புராஜெக்ட் உருவாக்கப்பட்டது. அதற்கு உலக அளவிலான போட்டியில் பரிசு கிடைத்ததும் மிக்க மகிழ்ச்சி. இந்த ஆய்வில் நான் ஹார்டுவேர் சம்பந்தமான பணிகளையும் மோகனப்பிரியா சாஃப்ட்வேர் சம்பந்தமான பணிகளையும் பார்த்துக்கொண்டோம். முதலில் பெரிய சாவாலாக இருந்தது, வயர்லெஸ் வீடியோ டிரான்சிஷன் தான். முதலில் அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி, அதற்கு நல்ல அவுட்புட் கிடைக்கலை. பின், ரேடியோ அலைக்கற்றையைப் பயன்படுத்தி ஏற்கனவே புராஜெக்ட் பண்ணியிருந்த நண்பர்கள் செல்வகணேஷ், சபரிஷ் உதவியால் ஒரு முன்னேற்றம் கிடைத்து, அந்த புராஜெக்டை முடிக்க முடிந்தது” என்றார் பெருமிதத்துடன்.

சபரிஷ் மற்றும் செல்வகணேஷ்
     சாலை ஜெயசீலனுடன் பயிலும் சக மாணவர்களான செல்வகணேஷ், சபரிஷ் ஆகியோரைப் பற்றி இங்கு கூறியே ஆக வேண்டும். ’டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்’ என்ற அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் நடத்திய, ‘அனலாக் டிசைன் கான்ட்டெஸ்ட்’ என்ற போட்டியில் இவர்களது புராஜெக்ட் முதல் பரிசை வென்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல்கேட்டுகளில்  ஒவ்வொரு வாகனமும் நின்று பணம் செலுத்திவிட்டுச் செல்லும். ஆனால், அப்படி நிற்கவே வேண்டியதில்லை என்று அதற்கு ஒரு மாற்றுவழியைச் சொல்கிறது இவர்களது புராஜெக்ட்டான ஆட்டோமேட்டிக் இ-டோல்கேட்.

     ரேடியோ அலைக்கற்றையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இ-டோல் கிட் என்ற கருவியை வாகனத்தில் பொருத்த வேண்டும். அதேபோல் டோல்கேட்டில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதே போன்றதொரு கருவி இருக்கும். இக்கருவிகளின் தயாரிப்பு விலை முறையே காரில் பொருத்தும் கருவி ரூ250ம் டோல்கேட்டில் பொருத்தும் கருவி ரூ3000ம் ஆகும். மொத்தமாகக் கொடுக்கும்போது, இந்தத் தொகையும் குறைய வாய்ப்புள்ளது என்கின்றனர்.

     இது எப்படிச் செயல்படுகிறது? வாகனம் டோல்கேட்டை கடக்கும் போது, அலைக்கற்றையின் உதவியால் வாகனத்தின் எண் சரிபார்க்கப்பட்டு கம்ப்யூட்டரில் அந்த எண்ணுக்குச் சொந்தக்காரரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் வசூலிக்கப்பட்டுவிடும் (மாடல் புராஜெக்ட்டில் மொபைல் போனில் பணம் வசூலிப்பதுபோல் வடிவமைத்திருக்கின்றனர்). அதற்கான செய்தி மற்றும் இருப்புத்தொகை அவர் மொபைலுக்குப் போய்விடும். கண் இமைக்கும் நேரத்தில் இந்த வேலைகள் நடந்து முடிந்து உடனே கேட் திறந்துவிடும். பேலன்ஸ் தொகை இல்லாவிட்டாலோ அல்லது இ-டோல் கிட் கருவி பொருத்தப்படாமல் இருந்தாலோ கேட் திறக்காது. அந்த நேரத்தில் அவர்கள் அங்கேயே ரீசார்ஜ் செய்யலாம் அல்லது கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்தால் கம்ப்யூட்டரில் தானியங்கி ஆப்ஷனை மாற்றி, கேட்டை திறப்பார்கள். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் முதலிலேயே அக்கருவியை வாகனங்களில் பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கின்றனர்.


     சபரிஷ் கூறுகையில், “இ-டோல் கிட் கொடுக்கும் பயன்கள் எண்ணற்றவை. முக்கியமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவர் போதும். டிராபிக் ஜாம் ஏற்படாது, நேரம் மிச்சப்படுத்தப்படும். வாகன எரிபொருள் மிச்சமாகும். ஒவ்வொரு டோல்கேட்டிலும் நின்று நேரம் விரயமாகும் நிலை இருக்காது. இம்முறையில் ஒரு மணி நேரத்தில் 1500 வாகனங்கள் கேட்டைக் கடக்கலாம். இதைப் பற்றி தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் பேசுவதற்கு முயன்றும் வாய்ப்புகள் நழுவிச் சென்றன. இந்த இ-டோல் கிட் புராஜெக்ட்டை நடைமுறை வாழ்க்கையில் கொண்டுவந்து ஒழுங்காக முறைப்படுத்தினால் பலன் கைமேல் கிடைக்கும்” என்றார்.

(நன்றி: புதிய தலைமுறை)