Saturday, August 20, 2011

ஆங்கிலமும் நாப்பழக்கம்...

....... எஸ்.கார்த்திகேயன்.........

                அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் என்றாலே அச்சம்தான். குறிப்பாக கிராமத்துக் குழந்தைகள். ஆனால் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒத்தப்பட்டி கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் குறித்துக் கவலை இல்லை. நுனிநாக்கு ஆங்கிலம் அவர்களுக்கு அத்துப்படி. இந்தக் கிராம மாணவர்களின் அனைவரது வீட்டிலும் ஆங்கில உரையாடல்களே ஒலிக்கின்றன. படிப்பறிவு இல்லாத அந்தப் பெற்றோர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, ‘நம்ம பிள்ளையும் தஸ் புஸ்னு இங்கிலீபீஸ்ல பேசுதே’  என்கிற பூரிப்பில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.

    நரையன்குளம் ஒத்தப்பட்டியில் அமைந்துள்ள இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200 மாணவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானோர் தலித் மாணவர்கள்.

நோ.... தஸ்.. புஸ்.. ஒன்லி இங்கிலீஸ்!
         ‘நம் கிராம மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறனும் முக்கியம்’ எனக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்குத் தங்கள் சொந்த செலவில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இங்குள்ள பள்ளி ஆசிரியர்கள். இவர்களில் ஒருவரான ஜெயக்குமார் கூறும்போது,

ஜெயக்குமார்
        “நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் அதிகம் செலவு செய்து தங்கள் குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி தர்றாங்க. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு அந்த அளவுக்கு வசதி கிடையாது. தற்போது அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்கென தனி வகுப்புகள் கிடையாது. இங்கிலீஷ் ஒரு பாடமாக இருந்தாலும் அது ஏட்டுக் கல்வியாக இருக்கிறதே தவிர, மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக இல்லை.

   இந்த நிலையில் ஒரு தனியார் அகாடமி மூலம் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொடுக்கலாம் என்று தோன்றியது. பின்னாட்களில் அவர்கள் மேற்படிப்புகளுக்காக நகரங்களுக்குச் செல்லும்போது ஆங்கிலம் பேசுவதில் எந்தவிதமான தயக்கமும் இருக்கக் கூடாது என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்தப் பயிற்சியை அவர்களுக்கு அளிக்கிறோம். மாணவர்கள் தங்களிடையே பேசிக் கொள்ளும்போதும் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாடும் போதும் ஆங்கிலத்திலேயே பேசிப் பழகச் சொல்கிறோம்.

   இப்படித்தான் எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன் பாட்டியிடம் சென்று, ‘ஹாய் கிராண்ட்மா... வேர் ஆர் யூ கோயிங்?’  என்று கேட்டிருக்கிறான். ஆங்கில வாசனையையே அறியாத அந்தக் கிராமத்து மூதாட்டி, தன் பேரன் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டு, பூரித்துப் போன பாட்டி தன் சுருக்குப் பையில் இருந்து நூறு ரூபாயை எடுத்து பரிசாகக் கொடுத்துள்ளார்” என்று பூரிப்புடன் கூறுகிறார் ஜெயக்குமார்.

      ’ஸ்போக்கன் இங்கிலீஷ் அகாடமி நடத்தி வரும் சிவசுப்பிரமணியன் பகுதி நேரமாக இப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறார். ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணம், ஆங்கிலத்தில் கதை சொல்லுதல், உரையாடல்கள் போன்ற அடிப்படைகளைக் கொண்டு ஆங்கிலம் கற்பித்து வருகிறார் இவர்.
சிவசுப்பிரமணியன்
      ”முதலில் கிராமப்புற மாணவர்களுக்கு இங்கிலீஷ் கற்றுக் கொடுக்குறதுல சிரமம் இருக்குமே என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்கள் பசுமரத்தாணி போல் சொல்லிக் கொடுக்கும் இங்கிலீஷை உடனடியாக உள்வாங்கிக் கொண்டனர். நான் எல்லா இன்ஸ்ட்ரக்‌ஷனும் இங்கிலீஷ்லதான் கொடுப்பேன். அதை எளிதாகப் புரிந்து கொள்கின்றனர். பதிலும் இங்கிலீஷிலேயே சொல்லுவார்கள். நான் பேசுவதற்கான அனைத்து பயிற்சிகளும் கொடுத்துடுவேன். அதன்பின் இப்பள்ளி ஆசிரியர்கள் தான் இங்கிலீஷ்ல எழுத்துப் பயிற்சி, வாசிப்புத்திறன் போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்கின்றனர்” என்கிறார் சிவசுப்பிரமணியன்.

     பள்ளியின் தலைமயாசிரியர் ஜெசிந்தா கூறுகையில், “தற்போது காலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரையும் மாலை பள்ளி முடிந்த பின்பு 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நடக்குது. ஒரு வாராத்துக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தினமும் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது கிளாஸ் நடக்கிறது” என்றார்.

         இவை மட்டுமின்றி எல்லா விதத்திலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளனர் இப்பள்ளி ஆசிரியர்கள். இப்பள்ளியில் படித்த மாணவர்கள் மேல்நிலைக்கல்வி மற்றும் கல்லூரிப் படிப்புகளில் சேர இயன்ற உதவிகளைச் செய்கிறார்கள். இப்பள்ளியில் படித்து பின் ஆசிரியர் பயிற்சி முடித்த தலித் பெண் ஒருவரை, அதிகாரிகள் அனுமதியுடன் அதே பள்ளியில் பகுதி நேர ஆசிரியையாக பணியமர்த்தியுள்ளனர்.

         கோடை விடுமுறைகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன் முக்கிய நோக்கமே அவர்கள் பயிற்சியில் கற்றதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே. ஆனால் மற்ற பாடங்கள் எடுக்கும் அந்த ஆசிரியர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொடுக்க நேரம் இருக்காது.

      ஆகவே, அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொடுக்க தனி ஆசிரியர்களை நியமித்து பயிற்சிக்கென கால அட்டவணையிலேயே தனி நேரம் ஒதுக்கலாமே.

(நன்றி: புதிய தலைமுறை)