Sunday, January 22, 2012

மக்கள் நலனே மருத்துவர் நலன்!

--------- எஸ்.கார்த்திகேயன் ---------

டாக்டர்  சுப்ரமணியன்
           இந்தியா சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் கூட கிராமப்புறங்களில் மருத்துவ சேவை அரிதான ஒன்றாகத்தான் இருக்கிறது. மருத்துவர்களும் கிராமங்களில் பணியாற்றுவதற்கு விரும்பி முன்வருவதில்லை. அனைவருமே நகரத்தை நோக்கி படை எடுக்க வேண்டிய நிலை. ஆனால், தனது சொந்த கிராமத்தில் நகர மருத்துவமனைகளைக் காட்டிலும் ஹைடெக் மருத்துவமனையைக் கட்டி, தன் மருத்துவ சேவையை தொடர்கிறார் ஒரு மருத்துவர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன் தான் அந்த அபூர்வ மருத்துவர்.

         படிப்பை முடித்துவிட்டு லண்டனில் பணிபுரிந்த போது தமிழ்நாட்டில் அரசு மருத்துவராக பணி நியமனம் கிடைத்திருக்கிறது. சொந்த நாட்டில் பணியாற்ற வேண்டும் என்பதாலேயே லண்டன் பணியைத் துறந்துவிட்டு நாகை மாவட்டத்திலேயே அரசு மருத்துவராக சுமார் 12 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார் சுப்ரமணியன். ஆனால், அங்குள்ள வசதிகளை வைத்துக் கொண்டு தம் மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் மக்களுக்குத் தரமான மருத்துவ சேவையை அளிக்க முடியவில்லையே என்ற மனக்குறை அவருக்கு. அதனால், அரசு வேலையை உதறித் தள்ளிவிட்டு சில ஆண்டு போராட்டங்களைக் கடந்து, தன் கனவு மருத்துவமனையை சமீபத்தில் தன் சொந்தக் கிராமத்திலேயே கட்டியுள்ளார். இவரின் தந்தை, நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து சுதந்திரத்திற்குப் போராடியவர். அப்பாவின் ஆசைக்கிணங்க தன் சொந்த கிராமத்தில் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு ‘நேதாஜி மருத்துவமனை’ எனப் பெயர் வைத்திருக்கிறார் டாக்டர் சுப்ரமணியன்.          இந்த மருத்துவமனைக்காக மிக அக்கறை எடுத்து இவர் அமைத்திருக்கும் வசதிகள் ஏராளம். ஆபரேஷன் தியேட்டர், தீவிர சிகிச்சைப் பிரிவு, நோயாளிகளுக்கான அனைத்து அறைகளையும் இணைக்கும் ஆக்ஸிஜன் குழாய்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டோமேட்டிக் ப்ளட் டெஸ்ட், அதிநவீன எக்ஸ் ரே, இசிஜி கருவிகள் என்று அனைத்தும் ஒரு மாநகர தனியார் மருத்துவமனைக்கு இணையாக இருக்கின்றன.


         “ஒரு கிராமத்தில் இவ்வளவு பெரிய மருத்துவமனை கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. பல வருடங்களாக நான் சம்பாதித்த பணத்தை வைத்து மருத்துவமனையைக் கட்ட ஆரம்பித்து விட்டேன். சில சிரமங்களுக்குப் பின் இந்தியன் வங்கியில் கடன் கிடைத்தது. ‘இந்தக் கிராமத்துல எல்லா வசதிகளோட இப்படியொரு மருத்துவமனை கட்டுகிறீர்களே, வரவேற்பு இருக்குமா?’ என்று நிறைய பேர் கேட்டார்கள். பெரும்பாலும் கிராமப்புறங்களிலேயே இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவ வசதி சிறப்பானதாகக் கிடைப்பதில்லை. ஓர் அவசர சிகிச்சை என்றால் கூட அவர்கள் நாகப்பட்டிணம் போக வேண்டும். அங்கே பார்க்க முடியாது என்றால், தஞ்சாவூர் போக வேண்டும். இதைக் கருத்தில்கொண்டே இதை 24 மணி நேர எமர்ஜென்சி கேர் மருத்துவமனையாக அமைத்திருக்கிறேன்” என்றார் டாக்டர் சுப்ரமணியன் பெருமையாக.

         இவர் தன்னிடம் இருக்கும் ஒரே கைபேசி எண்ணை தனது குறிப்புச்சீட்டு முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் எமர்ஜென்சி எண் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 24 மணி நேரமும் தன் மருத்துவ சேவையை தங்கு தடையில்லாமல் செய்ய இது உதவியாக இருக்கும் என்பது இவரது எண்ணம்.

         “லேப் டெக்னீஷியன்கள், மருத்துவ சாதனங்களைக் கையாள்வது போன்ற வேலைகளுக்கு என் நட்பு வட்டத்தில் பல பேரிடம் கேட்டேன். கிராமத்திற்கு வந்து வேலை செய்ய யாரும் தயாராக இல்லை. பின், இந்தக் கிராமப் பகுதிகளிலேயே செவிலியர் படிப்புகள் படித்த பெண்களுக்கு வேலை கொடுத்து, அதி நவீன சாதனங்களைக் கையாள்வதற்கு நானே பயிற்சி அளித்தேன். அதற்கான வரைமுறைகள் அனைத்தையும் தெளிவாக எழுதி அவர்களிடம் கொடுத்திருப்பதால், திறமையாக வேலையைச் செய்து முடிக்கிறார்கள். அதோடு, கிராமத்து மக்கள் நெஞ்சு வலி போன்ற அவசர சிகிச்சை என்றால் நேராக இங்கு வருவார்கள். முதலில் நாங்கள் சிகிச்சை தான் அளிப்போம். அந்த தருணத்தில் பணத்தை உடனே கட்டுங்க என்றெல்லாம் நிர்பந்திக்க மாட்டேம். அவர்கள் நன்கு குணமாகி வீட்டிற்குச் சென்றபின் கூட சிகிச்சைக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறோம்” என்கிறார் இவர்.

அண்ணா.பாலகுமார்
          “சுப்ரமணியன் டாக்டர் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் போதே இப்பகுதி மக்களிடையே அவரது அக்கறையான சிகிச்சை ரொம்ப பிரசித்தம். இப்ப சொந்தக் கிராமத்திலேயே பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறார். சுத்தி இருக்கிற கிராமத்து மக்கள் எல்லாரும் அங்க போறாங்க. நவீன வசதிகள் இருந்தாலும் இப்பகுதிகளில் இருக்கிற மற்ற டாக்டர்கள் வாங்குற ஃபீஸ்தான் வாங்குறார்” என்றார், செம்போடை கிராமத்தைச் சேர்ந்த அண்ணா.பாலகுமார்.

         பொதுவாக, கிராமங்களிலிருந்து மருத்துவ உதவி பெற நகரங்களுக்குத் தான் போவார்கள். டாக்டர் சுப்ரமணியன் மருத்துவமனையை இங்கே அமைத்த பிறகு, பக்கத்து நகரங்களிலிருந்தும் கூட இந்தக் கிராமத்தைத் தேடி நோயாளிகள் வர ஆரம்பித்திருப்பது ஓர் ஆச்சர்யமான இனிய மாற்றம்.

(டாக்டர் சுப்ரமணியத்தின் ‘எமர்ஜென்சி’ கைபேசி எண்: 94426 49959)

(நன்றி: புதிய தலைமுறை)

2 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இவரை போல நல்லவர்கள் உள்ளதால் தான் இன்னும் மழை பொழிகின்றது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்றைய ஸ்பெஷல்

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

Post a Comment