Monday, December 26, 2011

புங்க விதையிலிருந்து பயோ டீசல்!

-------------- எஸ்.கார்த்திகேயன் -------------

புங்க விதையிலிருந்து பயோ டீசல் தயாரித்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்கள் மயிலாடுதுறை வடகரை கிராமப்பள்ளி மாணவிகள்.

(இடமிருந்து வலம்) ஆசிரியை ரோஸ்னா பர்வின் மற்றும் மாணவியர் லியானா ஃபஹஜத்  -  அரஃபாத் நிஷா.

        புங்க மரங்கள் நிறைந்த அழகிய சூழலில் அமைந்திருக்கிறது, நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே வடகரை கிராமத்திலுள்ள ஹஜ்ஜா சாரா அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி. மரத்திலிருந்து தினந்தோறும் உதிரும் புங்கம் காய்கள் குப்பைகளோடு சேர்ந்து வீணாவதைக் கண்டனர் அந்தப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அரஃபாத் நிஷா மற்றும் லியானா ஃபஹஜத்.

       குப்பை என வீணாகும் பொருளிலும் ஒரு பயன் இருப்பதை உணர்ந்தனர் அவர்கள். புங்க மர விதையிலிருந்து பயோ டீசல் எடுக்க முடியும் என்ற தகவலை அறிந்து அதை செயற்படுத்த முயன்றனர்.

        பள்ளியின் தாவரவியல் ஆசிரியை ரோஸ்னா பர்வின் வழிகாட்டுதலுடன், புங்க விதையிலிருந்து பயோ டீசல் தயாரித்துக் காட்டினர்.
அதுமட்டுமில்லாமல், தாங்கள் தயாரித்த புங்க எண்ணெயைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்கிக் காட்டினர்.

        தங்களது ஆய்வு குறித்து பெருமையுடன் விவரித்தனர் லியானா ஃபஹத்தும், அரஃபாத் நிஷாவும்.

        “நன்கு வளர்ந்த புங்க மரத்திலிருந்து ஆண்டுக்கு 9 முதல் 90 கிலோ வரை விதை கிடைக்கும். இந்த விதையிலிருந்து புங்க எண்ணெய் தயாரிக்க முடியும் என்பதை அறிந்தோம். 4 கிலோ விதையிலிருந்து 1 கிலோ புங்க எண்ணெய் எடுக்க முடியும். 1 கிலோ எண்ணெயிலிருந்து 3 யூனிட் மின்சாரம் கிடைக்கும். எளிதில் கிடைக்கும் புங்க எண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தும் போது அதிக விலையுடைய பெட்ரோல் டீசல் பயன்பாடு குறையும்” என்று புள்ளி விவரம் தருகிறார்கள் இருவரும்.

        புங்க விதைகளை நன்கு காய வைத்து அதை பின் நன்கு வடிகட்டி அந்த எண்ணெயை பயோ டீசலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் இவர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்க, உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

       “மெர்சீடஸ் என்ஜின் பொருத்தப்பட்ட அம்பாசிடர் காரை ஆய்வுக்காக பயன்படுத்தினோம். சுத்தமான பயோ டீசலைக் கொண்டு நேரடியாக என்ஜினை இயக்க முடியாது. ஆகவே, இரு வழிக் குழாய்களின் உதவியால் முதலில் பெட்ரோல் டீசல் கலனிலிருந்து சிறிது நேரம் என்ஜினை இயங்கச் செய்துவிட்டு, பின் புங்க மர பயோ டீசல் மூலம் இயங்கச் செய்தபோது, அந்த அதிசயம் நிகழ்ந்தது. பெட்ரோல்  டீசலில் இயங்கிய போது என்ஜின் சற்று உதறலுடன் காணப்பட்டது. ஆனால், பயோ டீசலில் என்ஜின்  மென்மையாக இயங்கியது. அத்துடன், அது எரிந்து வெளியிடும் புகையும் கரியை உமிழாமல், கண்ணை உறுத்தாமல், மூக்கை நெருடாமல், சுற்றுப்புறச்சூழலை கெடுக்காத வகையில் இருந்தது” என்று விவரிக்கும் மாணவிகள், தங்களின் ஆய்வுக்கு உதவியாக இருந்தவர் ரோஸ்னா பர்வீன் டீச்சர் என்கிறார்கள் நன்றியுடன்.

         புங்க மர பயோ டீசல் கண்டுபிடிப்பின் போது இவர்களுக்கு மேலும் ஒரு உண்மை புரிந்துள்ளது.

        அதாவது, மிகக் குறைந்த வெப்பநிலையில் பயோ டீசல் திடமாக மாறக்கூடியது. ஆகவே, மிகக் குறைந்த வெப்பநிலையில் டீசல் என்ஜினை இயக்க முடியாது. சிறிது நேரம் பெட்ரோல் டீசலைக் கொண்டு என்ஜினை இயக்கிய பின்பே, பயோ டீசலைக் கொண்டு இயக்கும் நிலை உள்ளது. ஆண்டிஜெல் மற்றும் வெப்பத்தகடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்சினையை எளிதில் சரி செய்யலாம் என்கிறார்கள் இவர்கள்.

நாகை கலெக்டர் முன் ஆய்வை விவரிக்கும் மாணவியர்
        சமீபத்தில் நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் டி.முனுசாமி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், புங்க விதையில் தயாரித்த பயோ டீசலைக் கொண்டு கார் என்ஜினை இயக்கிக் காட்டியுள்ளனர். மாணவிகளின் கண்டுபிடிப்பு விவரங்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளாராம் நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர்.

        புங்க விதை பயோ டீசலின் பயன்கள் குறித்துப் பட்டியலிட்டார் மாணவிகளின் வழிகாட்டி ஆசிரியை ரோஸ்னா பர்வின்.

ரோஸ்னா பர்வின்
        ”புங்க விதை பயோ டீசல், பெட்ரோலியப் பொருட்களைப் போல் எளிதில் தீப்பிடித்து வெடிக்காது. காற்றை மாசுபடுத்தாது. அமில மழை, புவி வெப்பமடைதல் போன்றவை இந்த டீசல் பயன்பாட்டால் குறையும். இந்த பயோ டீசலில் உயவுத் தன்மை முழுவதுமாக எரியக்கூடிய பண்புடையதால், பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கிடைக்கும் எரிசக்திக்கு இணையான சக்தியை உடையது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கையில், விலைக் குறைவான பயோ டீசல் எரிசக்தியை மாற்று சக்தியாக பயன்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் உயர்த்த முடியும்” என்கிறார் ரோஸ்னா.

குணசேகரன்
         “இந்த இளம் வயதில் மாற்று எரிபொருள் கண்டுபிடித்துள்ள இந்த மாணவிகளின் ஆர்வம் பாராட்டுக்குரியது. புங்க மரம் சார்ந்த தொழிலில் ஈடுபட முன்வருவோரை ஊக்கப்படுத்தி, அரசு மானியம் வழங்கி பயோ டீசலை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால், நம் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி காண முடியும்” என்கிறார் ஹஜ்ஜா சாரா அம்மாள் பள்ளி முதல்வர் குணசேகரன்.

(நன்றி: புதிய தலைமுறை கல்வி)

No comments:

Post a Comment