Monday, June 20, 2011

சொந்தக் காலில் நிற்கிறது ஒரு தன்னம்பிக்கை !

- எஸ்.கார்த்திகேயன் -

நடக்க முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர், ஆட்டோ டிரைவர்
+ மூன்று ஆட்டோக்களுக்குச் சொந்தக்காரர்


              யார் கிண்டல் பண்ணினாலும், நம்மால் முடியாதுன்னு டிஸ்கரேஜ் செய்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் கைவிட்டுடக் கூடாது...” என்கிறார் மாற்றுத் திறானாளியான சங்கரலிங்கம்.1971ம் வருடம், சிவகாசிக்கு அருகிலுள்ள கிராமத்தில் ஓர் ஏழ்மைக் குடும்பத்தில், ஆறு குழந்தைகளுள் நான்காவது ஆணாகப் பிறந்தவர் இவர். அண்ணன்களைக் காட்டிலும் பிறந்து 8வது மாதத்திலேயே நடக்க ஆரம்பித்த சங்கரலிங்கத்தை மூன்றாவது வயதில் தாக்கியது போலியோ. வீட்டில் உள்ளவர்களுக்கு அவர் குறித்த கவலை. வெளியில் கேலி, கிண்டல் பேச்சுக்கள். அவற்றையெல்லாம் கடந்து இன்று வெற்றி மனிதராக உலா வருகிறார் சங்கரலிங்கம்.

     ”நான் 8வது படிச்சுக்கிட்டிருந்தபோது, குடும்பநிலை காரணமாக என் படிப்பு நின்றது. சில வருடங்கள் அப்பா வைத்திருந்த பெட்டிக்கடையில் அவருக்கு உதவியாக வேலை செய்து பார்த்தேன். அப்பாவின் உடலும், தொழிலும் மிகவும் மோசமடைந்ததால், எனது 19வது வயதில் எங்கள் குடும்பம் கிராமத்திலிருந்து சிவகாசிக்குக் குடிபெயர்ந்தது.

      சில காலம் டீக்கடையில் வேலை செய்தேன். சம்பளம் குறைவாக இருந்ததால், தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனாலும் அதில் எனக்கு திருப்தி இல்லை.”

      இந்த நிலையில் சொந்த காலில் நிற்க விரும்பிய அவர், பிளாட்பாரத்தில் காய்கறிக் கடை ஒன்றை ஆரம்பித்தார். இவரது அம்மாதான் கடைக்குத் தேவையான காய்கறிகளையெல்லாம் மார்க்கெட்டிலிருந்து வாங்கி வருவார். தினமும் தாய் படும் கஷ்டங்களைப் பார்த்து காய்கறித் தொழிலைக் கைவிட்டு விட்டார்..

      “பிறகு நண்பர்கள் உதவியால் சிறிய பெட்டிக்கடை வைத்தேன். ஏஜெண்ட்களே கடைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்துடுவாங்க. அப்போதான், அண்ணன் வைத்திருந்த ஆட்டோவை ஓட்டிப் பழகினேன். ஆட்டோ ஓட்டறது
பிடிச்சிருந்தது. அதுவே பின்நாளில் எனக்குக் கை கொடுத்தது” என்கிறார். “ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யப் பிடிக்காததால், சொந்தமாக ஆட்டோ வாங்க அரசு வங்கியில் கடன் கேட்டேன். சில சிரமங்களுக்குப் பிறகு நண்பர்கள் உதவியால் கடன் கிடைத்தது.

      ஆட்டோ ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனது இடதுகாலை மட்டுமே பயன்படுத்தி பிரேக்கை கண்ட்ரோல் செய்வேன். அவ்வப்போது தேவைப்பட்டால் சிரமப்பட்டு வலது காலை பயன்படுத்துவேன். எந்த நேரமாக இருந்தாலும் நேரிலோ, செல்போன் மூலமோ எப்போது சவாரி வந்தாலும் சென்று விடுவேன். பயணிகளின் ஆதரவுதான் முக்கியம்” என்றவர், தொடர்கிறார். “அதே அரசு வங்கியில் கடன் வாங்கி இரண்டாவது ஆட்டோவும் வாங்கினேன். இரவு, பகல் பாராது கடுமையாக உழைத்து இரண்டு ஆட்டோவுக்கும் கடனைத் திருப்பியளித்த நிலையில், மூன்றாவது ஆட்டோ வாங்க கடன் கேட்டபோது, வங்கி கடன் தர மறுத்தது. பின் தனியார் வங்கி ஒன்றின் உதவியால் மூன்றாவது ஆட்டோ வாங்கினேன். தற்போது அதன் கடன் தொகை முடியும் தருவாயில் உள்ளது” என்கிறார் புன்னகையுடன்.

      ஒரு ஆட்டோவிற்கு, தான் டிரைவராகவும், மற்ற இரண்டிற்கு சம்பளத்திற்கு டிரைவர்களை வைத்திருக்கிறார். இரண்டு பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கும் சங்கரலிங்கம், இந்த மூன்று ஆட்டோக்களும் என் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.    

(நன்றி: புதிய தலைமுறை)                       

No comments:

Post a Comment