Tuesday, September 20, 2011

சவாலே சவாரி !

----------- எஸ்.கார்த்திகேயன் --------------- 

   ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரிஎன்று பெருமைப்பட்டுக் கொள்பவர்களுக்கென்றெ பல்வேறு சாகசப் பயிற்சிகளும், போட்டிகளும் நடத்தி வருகிறது காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள அட்வெஞ்சர் சோன்என்ற நிறுவனம். முன்னாள் இராணுவ வீரர் மேஜர் எஸ்.ஆர். ராய் என்பவர் இதனை ஆரம்பித்து தற்போது நிர்வகித்து வருகிறார். 


    ஜீப் த்திரில்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அட்வெஞ்சர் சோன் சமீபத்தில் தி பாலாறு சேலஞ்ச்என்ற போட்டியை நடத்தியது. ரோடு அல்லாத இடங்களில் ஜீப் ஓட்டுதலை மையமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டது. மதுராந்தகம் அருகே பாலாறு ஆற்றின் கரடு முரடான பாதைகள், அதிகம் மணல் பாங்கான இடங்கள், நீர் நிறைந்த குட்டைகள், கடினமான பாறைகள் இவைகளே ஜீப் ஓட்டும் போட்டிக்கான பாதைகள். தடைகளும் அவைகளே. அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.
    பொதுவாக ரேஸ் என்றாலே போட்டிக்கும் சவாலுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் ரேஸ் அல்லாத பல்வேறு தடைகளைக் கடந்து பந்தய தூரத்தை நிறைவு செய்யும் வித்தியாசமான   இப்போட்டியின் முக்கிய அம்சமே கூட்டு முயற்சியை மையமாகக் கொண்டது. ஒரு குழுவிற்கு மூன்று ஜீப்புகள் வீதம் மொத்தம் 13 குழுக்கள் போட்டியில் பங்கு பெற்றன. போட்டிக்கான பாதை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை இடையில் ஸ்பெஷல் ஸ்டேஜ்(எஸ்.எஸ்) எனப்படும் ஏழு தடைகள் இருக்கும். ஒவ்வொரு குழுவும் வெவ்வேறு ஸ்பெஷல் ஸ்டேஜில் இருந்து போட்டியைத் துவக்குவர். பல்வேறு தடைகளைக் கடந்து மீண்டும் துவக்கிய இடத்திலேயே போட்டியை முடிப்பர். அதாவது ஒரு குழு எஸ்.எஸ் 3ல் போட்டியைத் துவக்கினால் அவர்கள் மற்ற ஸ்பெஷல் ஸ்டேஜ்களை கடந்து மீண்டும் எஸ்.எஸ் 3ல் போட்டியை நிறைவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தடையை வெற்றிகரமாக முடிப்பதற்கான மொத்த நேரம், தடையைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு குழுவிற்கும் பாயிண்ட்டுகள் வழங்கப்பட்டன.

    முதல் நாள் ஒரு பகுதியிலும், இரண்டாம் நாள் பாலாற்றின் மற்றொரு பகுதியிலும் போட்டி நடத்தப்பட்டது. இயற்கையாக அந்த ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள நிலப் பரப்பின் தடைகளுடன் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் போட்டி முறைகளும் அவர்களுக்குத் தடையாக அமைந்தன. முதல் நாளில் எஸ்.எஸ் 4-ல் கொடுக்கப்பட்ட போட்டி முறை என்னவென்றால் ஒரு குழுவில் உள்ள மூன்று ஜீப்புகளில் போட்டியாளர்கள் ஏதேனும் இரண்டு ஜீப்புகளைத் தேர்ந்தெடுத்து ஒன்று மற்றொன்றைக் கட்டி இழுக்க வேண்டும். இழுக்கப்படுகின்ற ஜீப் என்ஜினை ஆஃப் செய்துவிட வேண்டும். அந்த இரு வாகனங்களும் போட்டி நடத்தும் குழுவினரால் வரையறுக்கப்பட்ட பாதையிலேயே சென்று எஸ்.எஸ் 4 ஸ்டேஜை முடிக்க வேண்டும். அதே எஸ்.எஸ் 4 ஸ்டேஜில் இரண்டாம் நாள் கொடுக்கப்பட்ட போட்டி முறை, ஜாக்கியைப் பயன்படுத்தாமல் ஒரு குழுவில் உள்ள மூன்று ஜீப்புகளிலும் ஒரு சக்கரத்தைக் கழட்டி ஸ்டெப்னி மாற்ற வேண்டும். இதை அவர்கள் 20 நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டும். சிலர் மணல் மேடுகளில் ஜீப்பை நிறுத்தி சக்கரத்தைக் கழட்டினர். மற்றும் சிலர் ஒரு ஜீப்பால் மற்றொரு ஜீப்பை கயிறு கட்டி இழுத்து ஒரு பகுதியைத் தூக்கி சக்கரத்தைக் கழட்டி மாற்றினர். ஒரு சில அணியினரே மூன்று ஜீப்புகளிலும் சக்கரத்தைக் கழட்டி மாற்றினர். அதற்குத் தகுந்தவாறு பாயிண்ட்டுகள் வழங்கப்பட்டன. இந்த டெக்னிக்கல் ஸ்டேஜைத் தவிர மற்றவை இயற்கையால் அமைந்த தடைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன.
    அருகருகேயுள்ள செங்குத்தான 5 மணல் மேடுகளில் ஜீப்பை ஏற்றி இறக்கி அவற்றைக் கடந்து வெளியே வர வேண்டிய ஸ்டேஜில் பல வாகனங்கள் பழுதாகி நின்றன. இரண்டாம் நாள் போட்டியின் போது ஒரு ஜீப் வேகமாக மேட்டில் ஏறி பறந்து சென்று பாறை மேல் விழுந்து நொறுங்கிப் பழுதானது. ஜீப்பின் சொந்தக்காரர், ’ஜீப் உடஞ்சத பத்தி கவலையே இல்லை, நம்ம சாகசத்த பாத்து நாலு பேரு சந்தோசப்பட்டாங்கள்ல அதுவே போதும் என்றார் உற்சாகமாக.
    சாகசமும் சவாலும் சரிவிகித்த்தில் கலந்திருக்கும் இந்த ஜீப் ஓட்டுதல் போட்டி மூலம் ‘எந்த தடைகளையும் துணிவோடு எதிர்கொண்டு அவற்றை கடந்து சென்று வெல்கிற மன உறுதி கிடைக்கிறதுஎன்றனர் பல இளைஞர்கள்.

    போட்டியில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் சென்னையைச் சேர்ந்த போட்டியாளரான மகேந்திரன். இவர் ஒரு மாற்றுத் திறனாளி, வலது கையை இழந்தவர். ஆனால் இவ்வளவு கடினமான போட்டியில் கலந்து கொண்டு மிகத் திறமையாக ஜீப் ஓட்டினார். 
                               மகேந்திரன்
     தனி நபருக்கான ஜீப் ஓட்டும் போட்டியில் மகேந்திரன் மிகத் திறமையாக ஜீப் ஓட்டி முடிக்கும் தருவாயில் ஜீப் பந்தயப் பாதையை விட்டு விலகியதால் பாதியிலேயே திரும்பினார். ஆனாலும் மகேந்திரன் 4 வீல் டிரைவில் சிறந்த செயல்பாட்டிற்கான இரண்டாவது பரிசு பெற்றார்.
மேஜர் ராய்

    ’தி பாலாறு சேலஞ்ச்நிர்வாகியான மேஜர் ராய் கூறுகையில்: இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஐடி கம்பெனிகளில் பணிபுரிபவர்கள், சுய தொழில் செய்பவர்கள் என நாள்தோறும் மன அழுத்தத்துடன் செயல்படுபவர்கள். அவர்கள் அனைத்தையும் மறந்து விட்டு சந்தோசமாக இருப்பதே எங்கள் நோக்கம். அவர்களுக்கு இது ஒரு ஆரோக்கியமான போட்டியாகவும், கூட்டு முயற்சியைப் பற்றி அறிந்து கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. மேலும் சாகசத்தை விரும்புபவர்களுக்கு நல்ல வடிகாலாகவும் இருக்கிறது என்றார்.

(நன்றி: புதிய தலைமுறை) 

------------------------------
புதிய தலைமுறையில் வெளிவராத மற்றும் சில படங்கள்......................

இரு சக்கரங்களில் நடனமாடும் ஜீப்புகள்!




 ---------------------------





1 comment:

எஸ்.கார்த்திகேயன். (S.Karthikeyan.) said...

தமிழகத்தில் இவை தவிர வேறு ஜீப் சாகச நிகழ்ச்சிகள் நடந்ததில்லை. ஏன்? இந்தியாவிலேயே குறைவுதான்.

Post a Comment