Sunday, January 22, 2012

உணவு(உழவர்) சந்தை

---------- எஸ்.கார்த்திகேயன் ----------


'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது’ என்பார்கள். ஆனால், ஓட்டல் வைத்தால்? தாங்கள் உற்பத்தி செய்த உணவுத் தானியங்களை  மதிப்புக்கூட்டி விவசாயிகள் சமைத்தும் விற்கிறார்கள் மதுரையில். மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் முயற்சியினால் உருவான இந்த உழவன் உணவகம், மதுரை நாராயணபுரத்தில் அமைந்துள்ளது. அமோகமாக விற்பனையாகிறது.

இன்றைய நிலையில் பீட்ஸா,  பர்கர் போன்ற கலோரி அதிகமுள்ள துரித உணவுகள் இளைய தலைமுறையினரை நோயாளிகளாக்கி அவர்களது சராசரி வாழ்நாளை குறைத்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்  என்கிற நோக்கத்தில்தான் இந்த உழவன் உணவகம் ஏற்படுத்தப்பட்டது.  இங்கு தனித்தனி  ஸ்டால்கள் வைத்திருக்கும் உழவர்கள், தாங்கள் விளைவித்த சிறுதானியங்களை தாங்களே சமைத்து விற்கிறார்கள். இதனால், இடைத்தரகர்கள், விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமை போன்ற பிரச்சினைகள் கிடையாது.  உழவர்கள் பகலில் உழவுப் பணிகளைச் செய்வதால் மாலை 5 மணியிலிருந்து இரவு வரை உழவன் உணவகம் இயங்குகிறது.

பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, தினை, வரகு போன்றவற்றை சாதாரணமாக சமைத்து விற்றால் யாரும் அதனை தற்போது விரும்ப மாட்டார்கள். ஆகையால், மதுரை தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரியில் இருந்து விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பாரம்பரிய உணவு வகைகளை மதிப்புக் கூட்டி சிறுதானியங்கள் மற்றும் மூலிகை உணவு வகைகளை மக்கள் விரும்பும் வகையில் சுவையாக விதவிதமான உணவுப்பொருட்களாக தயாரிக்கக் கற்றுத் தரப்படுகிறது. உதாரணமாக தினையில் பணியாரம், சேவு,அப்பம்; கம்பில் சீவல், கம்பங்கஞ்சி; வரகு அரிசியில் பொங்கல்,பிரியாணி, அதிரசம்;  சிறுதானியங்களில் முடக்கு அறுத்தான் தோசை, முள் முருங்கை தோசை, செம்பருத்தி இட்லி; குதிரைவாலிப் பொங்கல்; அத்திப்பழ அல்வா என நீண்டுகொண்டே செல்கிறது உழவன் உணவகத்தின் மெனு.


"சாதாரண கூலித் தொழிலாளி முதல் பணக்காரர்கள் வரை பல்வேறு தரப்பினர் இங்கு வர்றாங்க. அவங்க உடல் ஆரோக்கியத்திற்கு இந்த உணவு வகைகள் சிறந்தது என எண்ணுகிறார்கள். உணவுப் பொருட்களின் விலையும் குறைவானதாகவே விற்கிறோம். மதுரைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் நம் தமிழக பாரம்பரிய உணவு வகைகளை விரும்பிச் சாப்பிட்டு விட்டு தங்கள் நாடுகளுக்கும் வாங்கிச் செல்கின்றனர். மேலும் இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன் போன்ற நாடுகளுக்கும் உழவன் உணவகத்திலிருந்து குறிப்பிட்ட சில ஆர்டரின்பேரில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செஞ்சிருக்கோம். இங்கு சாப்பிட வரும் இக்கால தலைமுறையினர், ‘நாங்க இப்படி ஓர் உணவு வகைகளை பார்த்ததே இல்லை’ என்கின்றனர்.

சமீபத்தில் கலெக்டர் தலைமையில் மதுரை மாவட்ட அளவிலான பேங்கர்ஸ் மீட்டிங் நடந்தபோது, சோள பிஸ்கெட், தினைச் சேவு போன்ற உழவன் உணவகப் பொருட்கள் பரிமாறப்பட்டன. வங்கி அலுவலர்களிடம் அவை மிகுந்த வரவேற்பையும் பெற்றன. அதனால் தலைமை வங்கி அதிகாரி, இனி வங்கி சம்பந்தமான மீட்டிங் நடந்தால் உழவன் உணவகப் பொருட்களை வாங்குங்க என்று மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் மெயிலில் அறிவுறுத்தினார். மொத்தத்தில் விவசாயிகளுக்கு ஒரு வாழ்வாதாரமாக விளங்கும் உழவன் உணவகம் மக்களுக்கு விலை குறைவான, தரமான பாரம்பரிய உணவு வகைகளும் வழங்குகிறது..." என்றார், உழவன் உணவகத்தை நிர்வகித்துவரும் மதுரை வேளாண் விற்பனைத் துறை அலுவலர் ஆறுமுகம்.

தனலட்சுமி

வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தியான தனலட்சுமி  வறுமையில் வாடியதை அறிந்த கலெக்டர் சகாயம், அவருக்கு உழவன் உணவகத்தில் ஸ்டால் அமைக்க உதவியுள்ளார்.    "வறுமையில் வாடிக்கொண்டிருந்த என்னை அழைத்து வந்து பயிற்சியெல்லாம் அளித்து, உழவன் உணவகத்தில் ஒரு தொழிலை வைத்துக் கொடுத்தனர். இந்த வயதிலும் நான் சுயமாக சம்பாதிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 1,000 ரூபாய் வருமானம் வருகிறது. உழவன் உணவகம் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை அளித்துள்ளது" என்றார் தனலட்சுமி.

சகாயம், மதுரை மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் கூறுகையில், "இந்த முயற்சி நான் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோதே நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய நகரங்களில் விவசாயிகளை மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயார் செய்பவர்களாகவும் விற்பனை செய்பவர்களாகவும் பயிற்சி அளித்து செயல்படுத்தினோம். அங்கு உழவன் உணவகம் தொடங்கிய 11 மாதங்களில் ஏறக்குறைய 1 கோடியே 60 லட்சத்திற்கு விற்பனையானது. அப்போது 3 விவசாயிகள் கார் வாங்கியது குறிப்பிடத்தக்கது. நீண்ட நெடுங்காலமாக நம் தமிழ்ச் சமூகம் சாப்பிட்டு வந்த சத்தான, பாரம்பரிய உணவுகளை இன்று விவசாயிகள் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு அளித்து வருகிறார்கள். மேலும் மதுரையில் பல்வேறு இடங்களில் உழவன் உணவகம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

மதுரையில் உழவன் உணவகம் அமைக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2 வருடங்களுக்குமுன் சகாயம், நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது, அங்கு ஆரம்பித்து நன்றாகச் செயல்பட்டு வந்த உழவன் உணவகம் தற்போது மூடப்படும் நிலைமையில் உள்ளது. உழவன் உணவகம் என்ற இத்தகைய நல்ல திட்டத்தை அரசு, தமிழக அளவில் செயல்படுத்தினால் உழவர்கள் வாழ்வும் செழிக்கும்.  அழிந்து வரும் நம் பாரம்பரிய உணவு வகைகளை கல்விக் கண்காட்சிகளில் காட்சிப் பொருள்களாக மட்டுமே பார்க்கும் அவல நிலையும் மறையும்.

(நன்றி: புதிய தலைமுறை)

No comments:

Post a Comment