---------- எஸ்.கார்த்திகேயன் ----------
தமிழர்களின் தப்பாட்ட இசைக்கலையை கற்று, அதை ஆவணப்படமாகவும் எடுத்திருக்கிறார் ஓர் அமெரிக்கப் பேராசிரியை
|
சோயி செர்னியன் |
இளையான்குடி 'குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழு’ என்றாலே சிவகங்கை மாவட்டம் முழுக்க பிரபலம். கூடவே ‘அந்தக் குழுவுல ஒரு வெள்ளைக்கார அம்மாவும் தப்பாட்டம் ஆடுவாங்களே’ என்று சிலாகிப்பார்கள் மக்கள். அப்படியா என்று விசாரிக்கப் போனோம்; வியந்து பார்த்தோம். மற்ற தப்பாட்டக் கலைஞர்களுக்கு நிகராக, தப்பு அடிக்கும் கைகள் துடிக்க... இசை தெறிக்க அசத்திக் கொண்டிருந்தார் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி. அவர் பெயர் டாக்டர் சோயி செரினியன். அமெரிக்காவிலுள்ள ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எத்னோ மியூசிக்காலஜி(*) துறை பேராசிரியை.
“அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் எழுதிய நூல்களின் மூலம் தலித் மக்களைப் பற்றி அதிகம் அறிந்து கொண்டேன். நான் இசையியல் பேராசிரியை என்பதால், இம்மக்களின் மிகச்சிறந்த இசைக்கலையான தப்பாட்டத்தை ஆவணப்படுத்த எண்ணினேன். தப்பாட்டக் கலைஞர்களின் தொடர் வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதற்குத் தமிழகம் முழுவதும் கலைக் குழுக்களைத் தேடி அலைந்தேன். இறுதியாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள ‘குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழு’வை தேர்ந்தெடுத்து, அவர்கள் உதவியால் தப்பாட்டக்கலை நிகழ்வுகளை படம் பிடித்தேன். அப்போது என்னுடனேயே இருந்து எனக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருந்தவர் தமிழகத்தின் மிகப் பிரபலமான நாட்டுப்புறக் கலை ஆய்வாளரும் கலைஞருமான டாக்டர். கே.ஏ.குணசேகரன்” என்று கொஞ்சம் தமிழும் நிறைய ஆங்கிலமும் கலந்து பேசுகிறார் செரினியன்.
குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழுவினருடனேயே தங்கிய செரினியன், ஆவணப்படுத்துவதற்கான முதல் கட்டமாக தப்பாட்டக் கலையை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார். மிருதங்கம் மற்றும் டிரம்ஸ் இசைக்கலைஞர் இவர் என்பதால் தப்பாட்டக் கலைஞர்கள் கற்றுக் கொடுத்த இசை மிக எளிதில் செரினியனுக்கு வசப்பட்டுவிட்டது. அதிலும் தப்பு அடித்துக் கொண்டே ஆடுவது சற்று சிரமமான காரியமெனினும் அதையும் கற்றுக் கொண்டு இவர் சிறப்பாக ஆடுவது ஆச்சரியம்.
“தப்பாட்டக் குழுவில் உள்ள 9 பேரும் எனது ஆசான்கள். அவர்கள் சிறப்பான முறையில் எனக்குக் கற்றுக் கொடுத்தனர். தப்பில் உள்ள அந்தத் தாள அடிகளை வாயால் கூறி எளிதாக எனக்கு விளங்க வைத்தனர். எனது ஆசான்கள் சொல்லிக் கொடுக்கும் தாளங்கள் சில நேரம் சற்று கடினமாக இருந்தாலும், அதை எப்படியாவது முயற்சித்துக் கற்றுக் கொள்ளும் மாணவியாகத் தான் நான் இருந்தேன்” என புன்னகைக்கிறார் செரினியன்.
|
ஏசையா |
குறிஞ்சி மலர் குழுவின் வாத்தியார் ஏசையா கூறுகையில், “செர்னியன் அம்மாவுக்கு தப்பு கத்துக் கொடுக்கும் போது சில நேரம் அவங்க சரியா பண்ணலேனு நாங்க கோபப்பட்டாலும், ரொம்ப பொறுமையா நடந்துக்குவாங்க. அதே சமயம் எங்களுக்கு அவங்க பல்வேறு விஷயங்களில் வழிகாட்டியாகவும் இருப்பாங்க. வெளிதேசத்துல பேராசிரியரா இருக்கற அவங்களே ஒரு மாணவியா நம்மகிட்ட பாடம் படிக்கிறப்போ, நாமளும் நம்ம கலைக்கு மரியாதை செய்யணுமில்ல? அதனாலதான் அவங்க எங்க குழுவுக்கு வந்து, எனக்கு சொன்ன அறிவுரைகளால் நான் மதுப்பழக்கத்தை சுத்தமா விட்டுட்டேன். 2 வருஷமாச்சு. ஒரு ஆசானா இருந்து அத்தனை நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தேன்” என்றார் பெருமிதத்துடன்.
செரினியன், சென்ற இரண்டு வருடங்களாகத் தமிழகத்தில் அலைந்து திரிந்து தப்பாட்டக் கலையினை காட்சிகளாக ஆவணப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக திண்டுக்கல் ‘சக்தி தப்பாட்டக் குழு’வை சேர்ந்த பெண்கள் கம்பீரமாக தப்படித்துக் கொண்டே, தாளம் தப்பாமல் சுழன்று சுழன்று ஆடியதைக் கண்டு இன்னும் சொல்லி வியக்கிறார். அதே நேரம் தப்பாட்டக் கலைஞர்கள் சில பொது நிகழ்ச்சிகள் மற்றும் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளில் தப்பு இசைக்கின்றனர். அந்த வேலை இல்லாத நேரங்களில் கூலி வேலைகளுக்குச் செல்வதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. அரசர்கள் காலத்தில் செய்திகளை பறைசாற்றுவதற்கு பயன்பட்ட இந்த இசை, இன்று தலித் மக்களுக்கான விடுதலையிலும் முக்கியப் பங்காற்றுவது மகிழ்ச்சியான திருப்பம். இப்பேர்ப்பட்ட மகத்தான இசைக்கலைஞர்களுக்கான வாழ்வாதாரம் சிறப்பாக இருக்க வேண்டுமல்லவா? “ என்றார் வருத்தத்துடன்.
‘திஸ் இஸ் எ மியூசிக்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் தப்பாட்டக்கலை ஆவணப்படத்தை செரினியன் அமெரிக்காவில் திரையிட்டபோது அங்குள்ள பலரும் இந்த இசையை தாங்களும் கற்றுக் கொள்ள ஆசையாக இருப்பதாகக் கூறி இருக்கின்றனர். குறிப்பாக பெண்கள் தப்படித்துக் கொண்டு ஆடியதைப் பார்த்து பலமாகக் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கின்றனர். மேலும் சமீபத்தில் இத்தாலியில் இப்படத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு திரையிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் ‘திஸ் இஸ் எ மியூசிக்’ ஆவணப்படத்தை முதன் முதலாக மதுரையில் பிரிவியூ ஷோ போட்டுக் காண்பித்த போது, படத்தில் முக்கியப் பங்களித்த குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழுவினரே சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். வெகு நாட்கள் கழித்து தனது ஆசான்களான தப்பாட்டக் கலைஞர்களை சந்தித்த உற்சாகத்தில் அவர்களுடன் சேர்ந்து தப்பு அடித்துக் கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தார் செரினியன்.
“அடுத்து நான் எடுக்கப் போகும் ஆவணப்படத்தில் முழுக்க முழுக்க பெண்களே பணிபுரிவார்கள். அது தலித் மக்கள் கலைகளை வெவ்வேறு கோணங்களில் கூறுவதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அந்த ஆவணம் பார்ட்டிசிபேட்ரி வீடியோவாக பதிவு செய்யப்படும்” என்றார் செரினியன். பார்ட்டிசிபேட்ரி வீடியோ என்பது, சம்பந்தப்பட்ட கலைஞர்களே வெவ்வேறு குழுவாகப் பிரிந்து ஒரு பகுதியினர் படத்தை பதிவு செய்வர். மற்றவர்கள் அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பர். “இது போன்ற பங்களிப்பு வீடியோ தயாரிப்பின் மூலம் அவர்களுக்கு எளிய கேமராக்களில் வீடியோ எடுக்க கற்றுக் கொடுப்பதால் மிக எளிய வடிவிலான ஆவணப்படத்தை அவர்களே தயாரிக்க முடியும்” என்கிறார் செரினியன்.
சோயி செரினியனின் மின்னஞ்சல் முகவரி: zsherinian@ou.edu
(*எத்னோ மியூசிக்காலஜி: உலகத்திலுள்ள ஒவ்வொரு இனமும் தங்களுக்கென ஒரு இசையைப் பாரம்பரியச் சொத்தாகப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளது. இசைக்கருவி, ஒலி போன்றவை இடத்துக்கும் மக்களுக்கும் ஏற்றபடி மாறுகின்றன. இப்படிப்பட்ட இசையை அதன் கலாச்சாரப் பின்னணியோடு கற்றுக் கொள்ளும் படிப்பு தான் எத்னோ மியூசிக்காலஜி.)
(நன்றி: புதிய தலைமுறை)