செம்பருத்திப் பூவின் இதழ்கள், அல்லிவட்டம், மகரந்தங்கள் போன்ற பாகங்களை பாடப் புத்தகத்தில் காண்பிக்காமல், ஒவ்வொரு மாணவர்களின் கையிலும் அப்பூவைக் கொடுத்து கற்பித்தால், அது என்றும் மாணவர்களின் மனதைவிட்டு அகலாதுதானே?. இயற்பியல் செய்முறைகளை செய்து காட்ட வேண்டி இருந்தால், வகுப்பிலேயே தயாரிக்கப்பட்ட சிறு உபகரணங்களை வைத்து மாணவர்களுக்கு கற்பிப்பதோடு, அவர்களையும் அதில் முழு அளவில் ஈடுபடுத்தினால் எப்படி இருக்கும்?
இதுபோன்ற கற்றலின் இனிமை அளிக்கும் கற்பித்தல் முறைகளை ஆசிரியர்களுக்கு கற்றுத் தர நடந்து வரும் முயற்சியின் ஒரு பகுதிதான் மேலே தெரிவித்திருப்பது.
மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் திறன்களைப் பட்டை தீட்டும் நோக்கோடு, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி சிவகாசியிலுள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதேபோல மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.
செயல்வழிக் கற்றல் மூலம் கற்பிப்பதே மாணவர்களுக்கு சிறந்த கல்வி முறையாக அமையும். சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டமும் அதன்படியே செயல்வழிக் கற்றல் முறைகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. பொருள் அறியாமல் மனப்பாடம் செய்து கற்றலை இந்த முறைகள் மூலம் தவிர்க்கலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு செயல்வழிக் கற்றலை மாணவர்களுக்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் கொண்டு செல்வது என்பது குறித்தும், பள்ளிப் பாடப் புத்தகங்களில் உள்ள ஆய்வுகளை மாணவர்களுக்கு எவ்வாறு எளிய முறையில் கற்பிப்பது என்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இ-டீச்சிங் முறையில் கற்பித்தல், இண்டராக்டிவ் போர்டைப் பயன்படுத்தி கற்பித்தல், அறிவியல் சம்பந்தமான வீடியோ ஆவணங்களை யூ-டியூப் போன்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கற்பித்தல் போன்ற நவீன கற்றல் முறைகளை நிபுணர்கள் விளக்கியபோது, ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். காட்சித் தொடர்பு மூலம் கற்கும் வழிகளை மாணவர்களிடம் கொண்டு செல்வதன் மூலம் அவர்களின் சிந்தனைத் திறன் வளரும் என்பது ஆசிரியர்களுக்கு செய்முறை மூலம் தெளிவாக்கப்பட்டது.
பயிற்சி நாட்களில் மாலையில் அறிவியல் சம்பந்தமான திரைப்படங்கள் ஆசிரியர்களுக்குக் காட்டப்பட்டன. அந்தப் படங்களின் குறுந்தகடுகளும், மாணவர்களுக்குக் காட்டுவதற்காக வழங்கப்பட்டன.
மேரி ஜெயராணி |
“அறிவியல் பாடத்தில் உள்ள சந்தேகங்கள், செயல்முறைப் பயிற்சி பற்றிய விவரங்களை தகுந்த பேராசிரியர்கள் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. கல்வியாண்டின் ஆரம்பத்திலேயே இந்தப் பயிற்சியைக் கொடுத்திருந்தால், மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். இந்தப் பயிற்சியில் சொல்லப்பட்டவைகளை மாணவர்கள் மத்தியில் செயல்படுத்தினால், அவர்களின் ஆற்றல் நிச்சயம் அதிகரிக்கும்” என்கிறார் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியை மேரி ஜெயராணி.
செல்வராஜ்குமார் |
பயிற்சி குறித்து விருதுநகர் மாவட்டத்தின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ்குமார் தெரிவிக்கையில், “கற்பித்தல் முறைகள் எளிமையாக இல்லாவிட்டால் மாணவர்கள் தங்கள் படிப்பை பாதிலேயே கைவிடும் சூழல் ஏற்படும். இன்றைய சூழலில் இடைநிலைக் கல்வி அனைவருக்கும் கட்டாயம். அதை அவர்களுக்கு எவ்வாறு எளிய வழிகளில் கற்பிப்பது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இப்பயிற்சியும் அடங்கும். இதனால் மாணவர்கள் விரும்பிப் படிப்பது மட்டுமல்லாமல், பள்ளிப் பருவத்திலேயே பல சாதனைகளை புரியவும் முடியும்” என்கிறார்.
- எஸ்.கார்த்திகேயன்.
(நன்றி: புதிய தலைமுறை கல்வி)
1 comment:
hi,check my blog,i have nominated u for an award
Post a Comment