Saturday, March 12, 2011

ஒரு நாள் ஒரு வேளை(லை)

சுப்ரமணியம் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தார்.வேலை முடிந்து அல்ல,வேலையை உதறித்தள்ளிவிட்டு.காரணம்?தனது நேர்மைக்குப் புறம்பான செயல்கள் அங்கு நடப்பதால்.
பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அவர்முன் வந்து ஒரு பேருந்து நின்றது.'படிக்கட்டில் காட்டும் திறமையை படிப்பில் காட்டுங்கப்பா' பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்த்து ஒலிக்கும், நடத்துநரின் குரலோசை.அதைக் கேட்டதும் ,சுப்ரமணியம் தன் படிப்புக் காலத்தில் ஏற்பட்ட சிரமங்களையும் மீறி தன் திறமையால் முன்னேறியதை சற்று நினைவு கூர்ந்தார். அதற்குள் பேருந்து கிளம்பிவிட்டது.சாலையோரமாக நடக்கத் தொடங்கினார்.
தன்னுடன் படித்த சக நண்பர் ஒருவரை சாலையில் சந்தித்தார்.காரிலிருந்து இறங்கிய அவரது நண்பர், பழைய அனுபவங்களை அவருடன் பகிர்ந்து கொண்டார்.அப்போது அவரது நண்பர் தான் மேலை நாட்டில் வேலை பார்ப்பதாகவும்,நல்ல சம்பளம் கிடைப்பதாகவும் கூறினார்.மேலும் தாய் நாட்டை இழிவாகப் பேசி,மேலை நாட்டை ஒய்யாரத்தில் வைத்துப் பேசிய நண்பரின் பேச்சை சகிக்க முடியாமல் அவரிடமிருந்து விடை பெற்றார்.
நடைப் பயணத்துடன் தன் சிந்தனைப் பயணத்தையும் தொடங்கினார்.நம் நாடு எவ்வாறு வளர்ச்சிப்பாதையில் செல்லும் என யோசித்தார்.ஒரு தனிமனிதனின் முன்னேற்றம் ஒரு நாட்டின் முன்னேற்றம் ஆகாது,ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்ற,அவருடைய தனிப்பட்ட கருத்து அவர் மனதில் மேலோங்கியிருந்தது.
நாட்டைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென வீட்டைப் பற்றிய கவலை வந்தது.தான் வேலையை விட்ட செய்தியை, தன் மனைவியிடம் எவ்வாறு சொல்வதென்று தெரியாமல் வீட்டை நெருங்கினார் சுப்ரமணியம்.

No comments:

Post a Comment