Monday, June 20, 2011

சொந்தக் காலில் நிற்கிறது ஒரு தன்னம்பிக்கை !

- எஸ்.கார்த்திகேயன் -

நடக்க முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர், ஆட்டோ டிரைவர்
+ மூன்று ஆட்டோக்களுக்குச் சொந்தக்காரர்


              யார் கிண்டல் பண்ணினாலும், நம்மால் முடியாதுன்னு டிஸ்கரேஜ் செய்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் கைவிட்டுடக் கூடாது...” என்கிறார் மாற்றுத் திறானாளியான சங்கரலிங்கம்.1971ம் வருடம், சிவகாசிக்கு அருகிலுள்ள கிராமத்தில் ஓர் ஏழ்மைக் குடும்பத்தில், ஆறு குழந்தைகளுள் நான்காவது ஆணாகப் பிறந்தவர் இவர். அண்ணன்களைக் காட்டிலும் பிறந்து 8வது மாதத்திலேயே நடக்க ஆரம்பித்த சங்கரலிங்கத்தை மூன்றாவது வயதில் தாக்கியது போலியோ. வீட்டில் உள்ளவர்களுக்கு அவர் குறித்த கவலை. வெளியில் கேலி, கிண்டல் பேச்சுக்கள். அவற்றையெல்லாம் கடந்து இன்று வெற்றி மனிதராக உலா வருகிறார் சங்கரலிங்கம்.

     ”நான் 8வது படிச்சுக்கிட்டிருந்தபோது, குடும்பநிலை காரணமாக என் படிப்பு நின்றது. சில வருடங்கள் அப்பா வைத்திருந்த பெட்டிக்கடையில் அவருக்கு உதவியாக வேலை செய்து பார்த்தேன். அப்பாவின் உடலும், தொழிலும் மிகவும் மோசமடைந்ததால், எனது 19வது வயதில் எங்கள் குடும்பம் கிராமத்திலிருந்து சிவகாசிக்குக் குடிபெயர்ந்தது.

      சில காலம் டீக்கடையில் வேலை செய்தேன். சம்பளம் குறைவாக இருந்ததால், தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனாலும் அதில் எனக்கு திருப்தி இல்லை.”

      இந்த நிலையில் சொந்த காலில் நிற்க விரும்பிய அவர், பிளாட்பாரத்தில் காய்கறிக் கடை ஒன்றை ஆரம்பித்தார். இவரது அம்மாதான் கடைக்குத் தேவையான காய்கறிகளையெல்லாம் மார்க்கெட்டிலிருந்து வாங்கி வருவார். தினமும் தாய் படும் கஷ்டங்களைப் பார்த்து காய்கறித் தொழிலைக் கைவிட்டு விட்டார்..

      “பிறகு நண்பர்கள் உதவியால் சிறிய பெட்டிக்கடை வைத்தேன். ஏஜெண்ட்களே கடைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்துடுவாங்க. அப்போதான், அண்ணன் வைத்திருந்த ஆட்டோவை ஓட்டிப் பழகினேன். ஆட்டோ ஓட்டறது
பிடிச்சிருந்தது. அதுவே பின்நாளில் எனக்குக் கை கொடுத்தது” என்கிறார். “ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யப் பிடிக்காததால், சொந்தமாக ஆட்டோ வாங்க அரசு வங்கியில் கடன் கேட்டேன். சில சிரமங்களுக்குப் பிறகு நண்பர்கள் உதவியால் கடன் கிடைத்தது.

      ஆட்டோ ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனது இடதுகாலை மட்டுமே பயன்படுத்தி பிரேக்கை கண்ட்ரோல் செய்வேன். அவ்வப்போது தேவைப்பட்டால் சிரமப்பட்டு வலது காலை பயன்படுத்துவேன். எந்த நேரமாக இருந்தாலும் நேரிலோ, செல்போன் மூலமோ எப்போது சவாரி வந்தாலும் சென்று விடுவேன். பயணிகளின் ஆதரவுதான் முக்கியம்” என்றவர், தொடர்கிறார். “அதே அரசு வங்கியில் கடன் வாங்கி இரண்டாவது ஆட்டோவும் வாங்கினேன். இரவு, பகல் பாராது கடுமையாக உழைத்து இரண்டு ஆட்டோவுக்கும் கடனைத் திருப்பியளித்த நிலையில், மூன்றாவது ஆட்டோ வாங்க கடன் கேட்டபோது, வங்கி கடன் தர மறுத்தது. பின் தனியார் வங்கி ஒன்றின் உதவியால் மூன்றாவது ஆட்டோ வாங்கினேன். தற்போது அதன் கடன் தொகை முடியும் தருவாயில் உள்ளது” என்கிறார் புன்னகையுடன்.

      ஒரு ஆட்டோவிற்கு, தான் டிரைவராகவும், மற்ற இரண்டிற்கு சம்பளத்திற்கு டிரைவர்களை வைத்திருக்கிறார். இரண்டு பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கும் சங்கரலிங்கம், இந்த மூன்று ஆட்டோக்களும் என் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.    

(நன்றி: புதிய தலைமுறை)                       

Monday, May 16, 2011

அமைச்சரவை உறுதிமொழி!

அமைச்சரவை பதவியேற்பு விழா...
'ஆண்டவன்' மீது ஆணையிட்டு
உறுதிமொழிகிறேன்!

'ஆண்டவன்' என்றால் யார்?

நாத்திகன் கூற்று:
    இல்லாத ஒன்றின்மீது ஆணையிட்டால்தான்
    இருப்பதையெல்லாம் சுருட்ட முடியும்!

ஆத்திகன் கூற்று:
    நாத்திகராயினும், உறுதிமொழி காக்க
   ஆத்திகராவதே நாட்டுக்கு நல்லது!

தொண்டன் கூற்று:
    ஆண்டவரை(ஆட்சியில்) தோற்கடித்துவிட்டு,அவர்
    மீதே ஆணை உறுதிமொழியா?

மக்கள் மறுமொழி:
    எங்கள் வாழ்வு சிறக்க
    ஏதேனும் ஆணையிட்டால் நல்லது!

Sunday, May 8, 2011

அன்னையர் தினத்தன்னை 'மட்டும்' கொண்டாடாதே!

                                                                                                                                                                 படம்: கா.கே
 
ஆண்டொருமுறை மட்டும் அவளைக்
கொண்டாடாதே..
ஒவ்வொரடி-நீ எடுத்து வைக்கையில்
கொண்டாடியவளவள்
மழலையுன் பேச்சில் மலைத்து
நின்றவளவள்

உயிரெழுத்து-நீ பயில மெய் வருந்தி
உழைத்தவளவள்
உனதுச்சி-குளிர உக்கிர வெயிலில் உனக்கு
குடையானவளவள்
உனது மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி
மறந்தவளவள்

அன்னையவளை உன் ஆயிள் முழுவதும்
கொண்டாடு
ம்மா... என-நீ அழைத்த நொடியிலிருந்து
உனக்காகவே வாழ்கிறாள்
மாதவம்-செய்து கருவறையில் காத்தவளை
காப்பதே உன் கடமை!

Friday, May 6, 2011

குழந்தையின் வேலி உலகு.........? ஈழம்.

அம்மா..., அவங்கென்ன வேலிக்குள்ள
இருக்காங்க?
அவங்களெல்லாம் பாவம் செஞ்சவங்க.
அப்பா, நம்மதான் பாவம்
செஞ்சவங்கனுச்சு?
ஆமா, போன சென்மத்துல
செஞ்சிருப்போம்.
அவங்களெல்லாம் வெளியில வரச்
சொல்லும்மா?
இங்கிருக்கறவங்களே, அவங்களால்தான் வெளிய
போமுடியும்.
அம்மா.., என்ன, அப்பதேயிருந்து
உலறிக்கிட்டிருக்க?
ஈழத்துச் சனங்கள் எல்லோரும்
உலரிட்டுத்தானிருக்கோம்.
அம்மா.., ஒழுங்கா பதிலே
சொல்லமாட்டிக்கிற?
ஊமை நிலையிலடா, நாம்
இருக்கோம்.............

Sunday, May 1, 2011

உழைக்க மறக்காதே...

                                                                                                                                                                                  படம்- கா.கே

தொலைக்காட்சியில் நாள் முழுவதும்
சிறப்புப் 'பொழுதுபோக்கு' நிகழ்ச்சிகள்
'மே முதல் தேதியை'
முன்னிட்டு!
தினந்தினம் பொழுதுபோக்கு தினங்களை
கொண்டாடும் தொலைகாட்சிச் சேனல்கள்
உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடுவது
வேடிக்கை!
தெருக்கோடிகளில் வியர்வை சிந்தி
உழைக்கும் உழைப்பாளர்களின் மகிழ்ச்சிக்காகவா?
இக்கொண்டாட்டம்!
கோடிகளில் - விளம்பரங்கள் தரும்
வருவாயை அனுபவிக்கும் சாக்குக்குத்தான்
இக்கொண்டாட்டம்!
தொலைக்காட்சிகளின் தினசரிக் கொண்டாட்டங்களைக்
கண்டால் உழைப்பாளர்களின் பாடு தான்
திண்டாட்டம்!