Sunday, March 24, 2013

அவளுக்காக அலையும் காதல்!


விலகி ஓடினாய்
குறும்பு செய்தேன்
பாதம் தொட்டேன்
பாசம் காட்டினாய்
அள்ளி அணைத்தேன்
ஆடைகளுக்குள் புகுந்தேன்
உன்னை ஒப்படைத்தாய்
விளையாடினோம்
உறவாடினோம்
விட்டுச் செல்லாதே..
உன்னைக் கண்ட பின் கடலாய் வாழ ஆசையில்லை !
உனது கைக்குட்டை ஆக்கிக்கொள் !!
உனக்கு மட்டும் சொந்தமாக விரும்புகின்றேன் !!!


காதல் இல்லறம்


இமைக்காமல் உன்னைப் பார்த்திருப்பேன்
இமைத்து இமைத்து நீ சோர்ந்திருப்பாய்
இமைகள் மூடும் அந்த தருணம் உதடுகள் திறக்கும்
அது முத்தக் கவிதைகள் படைக்கும்

கவிதைக்கும், காமத்திற்கும் மயங்காத காதலர்கள் இல்லை
காமத்திற்கு மட்டுமே மயங்கினால் அது காதலே இல்லை
கவிதைக்கு உண்மை அழகு காமத்திற்கு கண்ணியம் அழகு
கவிதையான கண்ணியத்தில் தெரியும் வாழ்க்கையின் வழி

உனது வலியும் எனது வலியும் இணைந்து
பிறக்கும் கடைசி வலிதான் காதலின் ஒலி
எனக்கும் பிடித்த உனக்கும் பிடித்த
அந்த வலி தான் நம் உயிரின் ஒளி !


Thursday, March 7, 2013

ஒரு நாள் கூத்து !!



சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்!

புறாக்களை பறக்க விடுகிறோம்.
இனிப்புகள் பரிமாறுகிறோம்.
ஒரு நாள் கூத்து நிறைவடைகிறது.

மகளிர் தினமும் கூட கொண்டாடுகிறோம்!

புறாக்களை பறக்க விட மனமில்லையென்றாலும்
சிறகுகளையாவது ஒடிக்காமல் இருப்போம்.
இனிக்கச் செய்யாவிட்டாலும் கசப்பான அனுபவங்களை
ஏற்படுத்தாமல் இருப்போம்.
ஒரு நாள் கூத்தாக நிறைவடையாமல் சிறகடிக்கும்
சுதந்திரத்தை பகிர்ந்து வாழ்வோம் !!

Saturday, February 23, 2013

அவளை தொந்தரவு செய்யாதீர்கள்!



எதையோ இழந்தது போன்ற தேடல்
எதையும் இழக்கவில்லை

காலங்கள் தெரியவில்லை
தூங்கும் நேரத்தில் விழித்திருக்கிறேன்
பகல் முழுவதும் தூங்குகிறேன்
வேலை ஒன்றுமே செய்யவில்லை
தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாக ஒரு மன நிலை
செய்யாத ஒரு வேலையில் குறுக்கிடுபவர்கள் மேல் எரிச்சல்

சற்று தள்ளியிருப்பது அவன் உடல் மட்டுமே
இல்லாத பிரிவை மனம் மட்டுமே வளர்த்தெடுக்கிறது
மனதை கற்பனை செய்ய விடுவது ஆபத்து
கவிதைகளுக்கு மட்டும் விதிவிலக்கு

பெண்ணுரிமையில் நாட்டம் கொண்டவன் அவன்
நான் என்ற அகங்காரம் கொண்ட போது சிறு புன்னகை பரிசளித்தான்
இன்று அவனுக்கு கோபத்தை பரிசளிக்க மனம் ஒப்பவில்லை
பாடம் கற்பித்தவனுக்கே பாடம் தேவையில்லை
சம உரிமையில் நாட்டம் கொண்டவள் நான்

எதையோ இழந்தது போன்ற தேடல்
அவனும் தேடுகிறான்
எதையும் இழக்கவில்லை
கூடிய விரைவில் பிரிவை இழப்போம்.

Tuesday, February 12, 2013

பாலு மகேந்திராவின் வீடு



     எளிமை வறுமை அல்ல, மாறாக அது தான் கம்பீரம் என்று அடிக்கடிச் சொல்வார். அந்த கம்பீரமான படைப்புகளுள் ஒன்றானவீடுதிரைப்படம் இன்று பார்த்தோம். தாய் மடியில் இளைப்பாற எந்தக் குழந்தையும் விரும்பாமல் போகாது. அன்று வீடு என்ற கரு பிரசவித்த அதே வீடு தான் இன்று 4 வயதாகும் குழந்தையாக சினிமா பயிற்சிப் பட்டறையாக உருப்பெற்றிருக்கிறது. இது வெகு சிலர் அறிந்த விஷயம். வீடு படம் எடுப்பதற்காகவே கட்டப்பட்ட அந்த வீடு பின்னாளில் தனது சினிமாப் பயிற்சிப் பட்டறையாக மாறும் என அவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அதை, இயக்குனர் சாந்தாரமின் ஸ்டூடியோ பின்னாளில் புனே திரைப்படக் கல்லூரியாக மாறியது போல தான் இதுவும் என சிலாகிப்பார் அந்த சத்தியஜித் ரே-வின் மாணவர் பாலு மகேந்திரா.

  வாடகை வீட்டில் குடியிருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்டி குடிபோக வேண்டும் என்பது இயல்பான ஆசை. அப்படி சொந்த வீடு கட்டும் போது அதற்கு அவர்கள் படும் இன்னல்களை எவ்வித அலட்டல்களும் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட காவியமே வீடு. 1987-ல் வெளியான படம். அன்றைக்கும் இன்றைக்கும் நடுவில் பணத்தின் மதிப்பு மட்டுமே மாறியிருக்கிறது தவிர சொந்த வீடு கட்ட படும் பாடு மாறாமல் அப்படியே உள்ளது. ஆதலால் இன்னும் எத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் இப்படம் ஒரே தன்மையிலேயே இருக்கும். பல வருடங்கள் கழித்து நடக்கவிருப்பதை முன்கூட்டியே தன் எழுத்திலேயே வடிக்கும் சுஜாதாவின் ஆற்றலைப் போல் அவரின் நெருங்கிய நண்பரான பாலு மகேந்திராவும் அந்த தீர்க்கதரிசனத்தை அப்போதே தன் வீடு படைப்பில் புதைத்து வைத்திருக்கிறார்.

   வேலை செய்து தன் தங்கையையும், தாத்தாவையும் பார்த்துக் கொள்ளும் பெண். அவளிற்காக எதையும் இழக்கத் தயராக இருக்கும் வருங்கால கணவனாகப் போகும் காதலன். அவர்கள் ஆதரவுடன் கடன் வாங்கி ஆசை ஆசையாக வீடு கட்ட ஆரம்பிக்கிறாள். கட்டிட அனுமதி வாங்க அரசு அலுவலகத்தில் லஞ்சம். அலுவலகத்தில் கடனின் இரண்டாம் பாதி தொகையை வாங்க மானம் மாற்றுப் பொருளாக கேட்கப்படுகிறது. கட்டுமான பொருட்களில் பணக்கார இன்ஜினியர் செய்யும் திருட்டு. இதற்கு நடுவில் பணத்தட்டுப்பாடு,பாசப் போராட்டம் என இயல்பு வாழ்க்கை அப்படியே பிரதிபலிப்பது தவிர்க்க முடியாதது. தன் இயலாமையில் பெண் அழுவாள், ஆனால் அதன் பின்னர் ஒரு ஆணைக் காட்டிலும் பெண்ணிற்கு மன தைரியம் அதிகமாகவே வெளிப்படும். அது  அர்ச்சனா நடித்த கதாபாத்திரத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என தெளிவாகவே  தெரியப்படுத்தப்பட்டிருக்கும். சொக்கலிங்க பாகவதர் என் பக்கத்து வீட்டு தாத்தா போல் இருக்கிறாரே என்று சொல்லும் அளவிற்கு படத்தில் வாழ்ந்திருப்பார். பாதி கட்டி முடிக்கப்பட்ட வீட்டின் ஒரு ஓரத்திலுள்ள சுவரை ஆசையாக பார்த்து தொட்டுத் தடவி ரசிப்பார்.(அந்த சுவற்றிற்கு அருகில் அமர்ந்து படத்தைப் பார்க்கும் போது புன் முறுவலுடன் கூடிய சிறு துளி கண்ணீரை தவிர்க்க முடியவில்லை). வளரும் குழந்தையை அணுணுவாக ரசிப்பதுக்கு ஒப்பானது தான் அதுவும். வியர்வையும், குருதியும் சிந்தி உழைத்து சொந்த வீடு கட்டுவோர் அதை அனுபவித்திருப்பர்.

  அவள் வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்து கடைசி வரை இன்னல்களை மட்டுமே அனுபவிக்கிறாள். இறுதியில் முதலுக்கே மோசம் வருவது போல் பாதி கட்டப்பட்ட அந்த வீட்டிற்கும் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் வடிவில் ஆபத்து வருகிறது. ஆனால் அவள் மட்டும் நம்பிக்கை இழக்கவே மாட்டாள்.

Sunday, April 22, 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: ஆன்லைன் மூலம் இலவசப் படிப்பு!

--- எஸ். கார்த்திகேயன் ---


தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி அறிந்துகொள்ள ஆன்லைன் மூலம்  இலவசப்  படிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

     
ந்திய ஜனநாயக முறைப்படி அரசுத்துறை அலுவலகங்களில்
 மக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த 2005ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது அனைவரும் அறிந்ததே. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பரவலாக அனைத்து தரப்பு மக்களிடத்திலும் விழிப்புணர்வு இருப்பினும் அதை செயல்படுத்தும்போது ஏற்படும் சந்தேகங்களைப் போக்க வழக்கறிஞர் அல்லது எவரேனும் ஒருவரின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்களிடையே  பிரபலப்படுத்தும் நோக்கில் 15 நாள் ஆன்லைன் சர்டிஃபிகேட் படிப்பை மத்திய அரசு நடத்திவருகிறது.இது ஆங்கில மொழியில் நடைபெறும்.

     
இண்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் இருந்தால் இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்தப் படிப்பை இலவசமாகப் படிக்கலாம். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆன்லைன் படிப்பை படிக்க  http://rtiocc.cgg.gov.in/login.do என்ற  இணைய முகவரிக்குச் சென்று தங்கள் சுயவிவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மட்டுமே பதிவுகள் வரவேற்கப்படும். பின் தற்காலிகமாக பதிவுகள் நிறுத்தி வைக்கப்படும். கடைசியாக பதிவு செய்தவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் குழு எண் (Batch No.) கொடுத்து அவர்களுக்கென 15 நாட்கள் ஒதுக்கப்படும். இதில் முதல் 12 நாட்கள் படிப்பதற்காகவும் மீதமுள்ள 3 நாட்கள் ஆன்லைனில் தேர்வு எழுதுவதற்காகவும் ஒதுக்கப்படும்.

    அளிக்கப்பட்ட கடவுச் சொல்லைப் (Password)  பயன்படுத்தி ஒருவர் ஆன்லைன் மூலம் படிக்கலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தகவல்கள் கொண்ட நான்கு தொகுதிகளைப் படிக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியும் 3 அத்தியாயங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு தொகுதியையும் படித்து முடித்தபின் அவற்றிலிருந்து க்விஸ் முறையில் கேட்கப்படும் 10 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த தொகுதியை தரவிறக்கம் செய்ய முடியும். தேர்ச்சி பெறாவிட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இவ்வாறு அனைத்து தொகுதிகளையும் தரவிறக்கம் செய்து படிக்க வேண்டும். 12 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்டவருக்கு அளிக்கப்பட்ட கணக்கிற்குள் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி படிக்கலாம்.

     படிப்பதற்கு தரப்பட்டுள்ள தொகுதிகளுள் முதல் தொகுதி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய அறிமுகம் மற்றும் அதன் வரலாற்றைப் பற்றி விளக்குகிறது. 1766-ஆம் ஆண்டிலேயே ஸ்வீடன் நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வடிவம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரமும்இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தோற்றம், அதன் சட்ட வரையறைகள் போன்ற குறிப்பிடத்தக்க வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

     இரண்டாம் தொகுதி, தகவல் அளிக்கும் அதிகாரிகளின் பொறுப்புகளைப் பற்றி விவரிக்கிறது. ஒவ்வொரு மாவட்ட வட்டார அளவில் உள்ள உதவி பொதுத் தகவல் அதிகாரிதகவல் கோரும் விண்ணப்பங்களை பெறுவதற்கு மட்டுமே அதிகாரம் பெற்றவர், அதை பொதுத் தகவல் அதிகாரிக்கு’ 5 நாட்களுக்குள் அனுப்பி வைப்பார். அனைத்து அரசு நிர்வாகத் துறைகளில் உள்ள குறிப்பிட்ட பொதுத் தகவல் அதிகாரிதகவல் கோரும் விண்ணப்பங்களை வாங்குவது மற்றும் தகவல் அளிக்கும் உரிமை பெற்றவர்.

     இவ்வாறு பின்வரும் தொகுதிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தகவல்களை படிக்கக் கொடுக்கின்றனர். பொதுத் தகவல் அதிகாரிகொடுத்த தகவல்கள் திருப்தி அளிக்காதபட்சத்தில் அவரது மேலதிகாரியான முதல் மேல்முறையீட்டு அதிகாரியிடம்மேல்முறையீடு செய்யலாம். இரண்டாவது மேல்முறையீட்டின் மேல் 90 நாட்களுக்குள் பதிலளிக்க மத்திய/மாநில தகவல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது.

     தகவல் கோரும் செயல்முறைகளை தெளிவாக விளக்கி, சட்ட நுணுக்கங்களை மிக எளிய வடிவில் படித்துத் தெரிந்துகொள்ள இந்த ஆன்லைன் படிப்பு வழிவகை செய்கிறது. தரப்பட்டுள்ள தொகுதிகளை படித்து க்விஸ் வினாக்களுக்கு தேடி விடை அளிக்கும்போதே இது சுய கற்றல் படிப்பு என்பது விளங்கும். குறிப்பிட்ட குழுவில்(Batch) படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்த இணைய பக்கத்திலேயே கொடுக்கப்பட்ட விவாதப் பெட்டியில் ஆன்லைன் படிப்பு பற்றிய அவர்களது சந்தேகங்களை முதல் 12 நாட்கள் மட்டும் விவாதித்துக் கொள்ளலாம். அந்த விவாதக்களம் அவர்களுக்கு படிப்பிலும் கைகொடுக்கும். கடைசி மூன்று நாட்கள் விவாதப்பெட்டி இருக்காது.

     கடைசி மூன்று நாட்கள் ஆன்லைனில் தேர்வு எழுத வேண்டும். கேள்விகள் 13ம் நாளின் ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டுவிடும். மூன்று நாட்கள் எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட தேர்வர் கணக்கிற்குள் நுழைந்து வெளியேறலாம். அப்படியானால் பார்த்து காப்பி பண்ணி எழுதலாம் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் கேட்கப்படும் கேள்வி, நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு ஒரு சூழ்நிலை பற்றிக் கொடுத்து அதற்கு எவ்வாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோருவீர்கள் எனக் கேட்பார்கள். தேர்வர் அந்த கேள்விக்கு விடை தேடும்போதே, எவ்வாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரி விண்ணப்பிக்க வேண்டும், மேல்முறையீடு, விண்ணப்பிப்பதற்குரிய அடிப்படைத் தகவல்கள் போன்றவைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

     உதரணமாக, உங்கள் நகரில் சாலைகள் மிக மோசமாக உள்ளது எனக் கொடுத்து அ) தகவல் அறியும் உரிமைச் சட்ட்த்தில் யாரிடம் கேட்க வேண்டுமென தெரியாது, என்ன செய்வீர்கள்.......... ஆ) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அதை சரி செய்ய என்ன முயற்சி எடுப்பீர்கள்............  போன்ற கேள்விகள் கேட்கப்படும். இதில் முதல் கேள்விக்கு ஏதேனும் ஒரு துறைக்கு தகவல் கேட்டு விண்ணப்பிப்பேன், அவர்கள் சட்டப்படி அதை சரியான துறையான நெடுஞ்சாலைகள் துறைக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என்பதை மையமாக வைத்து மீதமுள்ள சரியான பதில் அமையும். இரண்டாம் கேள்விக்கு, நெடுஞ்சாலைகள் துறை டிவிஷனல் என்ஜினீயரிடம் தகவல்கள் கோருவதாக மேலதிக பதில்கள் அமையும்.

     இறுதியாக தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆன்லைன் சர்டிஃபிகேட் படிப்பு பற்றி தேர்வு எழுதியவரின் கருத்துகளை பதிவு செய்தபின் படிப்பு நிறைவடைகிறது. சில நாட்களில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் மின்னஞ்சலில் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

     இணைய பயன்பாடு விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் மிக எளிதாக இந்த தகவல் அறியும் உரிமை சட்ட படிப்பை ஆன்லைன் மூலம் படிக்க முடியும்.

(நன்றி: புதிய தலைமுறை கல்வி)

Saturday, February 25, 2012

கற்பித்தல் தொழில்நுட்பப் பயிற்சி!


          செம்பருத்திப் பூவின் இதழ்கள், அல்லிவட்டம், மகரந்தங்கள் போன்ற பாகங்களை பாடப் புத்தகத்தில் காண்பிக்காமல், ஒவ்வொரு மாணவர்களின் கையிலும் அப்பூவைக் கொடுத்து கற்பித்தால், அது என்றும் மாணவர்களின் மனதைவிட்டு அகலாதுதானே?. இயற்பியல் செய்முறைகளை செய்து காட்ட வேண்டி இருந்தால், வகுப்பிலேயே தயாரிக்கப்பட்ட சிறு உபகரணங்களை வைத்து மாணவர்களுக்கு கற்பிப்பதோடு, அவர்களையும் அதில் முழு அளவில் ஈடுபடுத்தினால் எப்படி இருக்கும்?

         இதுபோன்ற கற்றலின் இனிமை அளிக்கும் கற்பித்தல் முறைகளை ஆசிரியர்களுக்கு கற்றுத் தர நடந்து வரும் முயற்சியின் ஒரு பகுதிதான் மேலே தெரிவித்திருப்பது.

         மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் திறன்களைப் பட்டை தீட்டும் நோக்கோடு, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி சிவகாசியிலுள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதேபோல மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.

        செயல்வழிக் கற்றல் மூலம் கற்பிப்பதே மாணவர்களுக்கு சிறந்த கல்வி முறையாக அமையும். சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டமும் அதன்படியே செயல்வழிக் கற்றல் முறைகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. பொருள் அறியாமல் மனப்பாடம் செய்து கற்றலை இந்த முறைகள் மூலம் தவிர்க்கலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு செயல்வழிக் கற்றலை மாணவர்களுக்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் கொண்டு செல்வது என்பது குறித்தும், பள்ளிப் பாடப் புத்தகங்களில் உள்ள ஆய்வுகளை மாணவர்களுக்கு எவ்வாறு எளிய முறையில் கற்பிப்பது என்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

        இ-டீச்சிங் முறையில் கற்பித்தல், இண்டராக்டிவ் போர்டைப் பயன்படுத்தி கற்பித்தல், அறிவியல் சம்பந்தமான வீடியோ ஆவணங்களை யூ-டியூப் போன்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கற்பித்தல் போன்ற நவீன கற்றல் முறைகளை நிபுணர்கள் விளக்கியபோது, ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். காட்சித் தொடர்பு மூலம் கற்கும் வழிகளை மாணவர்களிடம் கொண்டு செல்வதன் மூலம் அவர்களின் சிந்தனைத் திறன் வளரும் என்பது ஆசிரியர்களுக்கு செய்முறை மூலம் தெளிவாக்கப்பட்டது.

       பயிற்சி நாட்களில் மாலையில் அறிவியல் சம்பந்தமான திரைப்படங்கள் ஆசிரியர்களுக்குக் காட்டப்பட்டன. அந்தப் படங்களின் குறுந்தகடுகளும், மாணவர்களுக்குக் காட்டுவதற்காக வழங்கப்பட்டன.

மேரி ஜெயராணி
      “அறிவியல் பாடத்தில் உள்ள சந்தேகங்கள், செயல்முறைப் பயிற்சி பற்றிய விவரங்களை தகுந்த பேராசிரியர்கள் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. கல்வியாண்டின் ஆரம்பத்திலேயே இந்தப் பயிற்சியைக் கொடுத்திருந்தால், மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். இந்தப் பயிற்சியில் சொல்லப்பட்டவைகளை மாணவர்கள் மத்தியில் செயல்படுத்தினால், அவர்களின் ஆற்றல் நிச்சயம் அதிகரிக்கும்” என்கிறார் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியை மேரி ஜெயராணி. 

செல்வராஜ்குமார்
        பயிற்சி குறித்து விருதுநகர் மாவட்டத்தின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ்குமார் தெரிவிக்கையில், “கற்பித்தல் முறைகள் எளிமையாக இல்லாவிட்டால் மாணவர்கள் தங்கள் படிப்பை பாதிலேயே கைவிடும் சூழல் ஏற்படும். இன்றைய சூழலில் இடைநிலைக் கல்வி அனைவருக்கும் கட்டாயம். அதை அவர்களுக்கு எவ்வாறு எளிய வழிகளில் கற்பிப்பது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இப்பயிற்சியும் அடங்கும். இதனால் மாணவர்கள் விரும்பிப் படிப்பது மட்டுமல்லாமல், பள்ளிப் பருவத்திலேயே பல சாதனைகளை புரியவும் முடியும்” என்கிறார்.

- எஸ்.கார்த்திகேயன்.

(நன்றி: புதிய தலைமுறை கல்வி)

Friday, January 27, 2012

நாலு கால் சூறாவளி!

--- படங்கள்: எஸ்.கார்த்திகேயன் ---   --- கமெண்ட்ஸ்: த்ராவிட் ---

பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நான் எடுத்து புதிய தலைமுறை இதழில் வெளியான புகைப்படங்கள்.

”மாடுகளுக்கு கொம்பு இருக்கு.. வீரர்களுக்கு தெம்பு இருக்கு.. எங்களுக்கு வம்பு எதுக்கு?

”பாஞ்சு போயி வீரர்களை தூக்கறதை விட்டுட்டு பதுங்கி நிக்கற எங்ககிட்ட வாலாட்டறியே!

”பாத்ததுமே ஏத்துதா திகிலை? தில் இருந்தா தொட்டுப்பாரு திமிலை!”

”அலேக்கா தூக்கி வீசுது சுடலை... உருவாம விட்டுச்சே குடலை!”

”ஒத்தைக்கு ஒத்தை போட்டி... செத்துப் பொழைச்சேன் ஆத்தி!”

”அடக்கிட்டா சிங்கம்லே! அகப்பட்டா ஆஸ்பத்திரி!”

”சீறிப் பாயற காளை... ஏறி மிதிக்குது ஆளை!”

”ரவுண்டு கட்டி நின்னா மெரண்டு போவேனாக்கும்... இருடி!”

”கொம்பை மடக்கிருச்சு காளை... சூடுங்கம்மா வெற்றி மாலை!”

(நன்றி: புதிய தலைமுறை மற்றும் த்ராவிட்)

Monday, January 23, 2012

சும்மா அதிருதுல்ல!

---------- எஸ்.கார்த்திகேயன் ----------

தமிழர்களின் தப்பாட்ட இசைக்கலையை கற்று, அதை ஆவணப்படமாகவும் எடுத்திருக்கிறார் ஓர் அமெரிக்கப் பேராசிரியை

சோயி செர்னியன்

          இளையான்குடி 'குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழு’ என்றாலே சிவகங்கை மாவட்டம் முழுக்க பிரபலம். கூடவே ‘அந்தக் குழுவுல ஒரு வெள்ளைக்கார அம்மாவும் தப்பாட்டம் ஆடுவாங்களே’ என்று சிலாகிப்பார்கள் மக்கள். அப்படியா என்று விசாரிக்கப் போனோம்; வியந்து பார்த்தோம். மற்ற தப்பாட்டக் கலைஞர்களுக்கு நிகராக, தப்பு அடிக்கும் கைகள் துடிக்க... இசை தெறிக்க அசத்திக் கொண்டிருந்தார் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி. அவர் பெயர் டாக்டர் சோயி செரினியன். அமெரிக்காவிலுள்ள ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எத்னோ மியூசிக்காலஜி(*) துறை பேராசிரியை.

          “அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் எழுதிய நூல்களின் மூலம் தலித் மக்களைப் பற்றி அதிகம் அறிந்து கொண்டேன். நான் இசையியல் பேராசிரியை என்பதால், இம்மக்களின் மிகச்சிறந்த இசைக்கலையான தப்பாட்டத்தை ஆவணப்படுத்த எண்ணினேன். தப்பாட்டக் கலைஞர்களின் தொடர் வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதற்குத் தமிழகம் முழுவதும் கலைக் குழுக்களைத் தேடி அலைந்தேன். இறுதியாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள ‘குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழு’வை தேர்ந்தெடுத்து, அவர்கள் உதவியால் தப்பாட்டக்கலை நிகழ்வுகளை படம் பிடித்தேன். அப்போது என்னுடனேயே இருந்து எனக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருந்தவர் தமிழகத்தின் மிகப் பிரபலமான நாட்டுப்புறக் கலை ஆய்வாளரும் கலைஞருமான டாக்டர். கே.ஏ.குணசேகரன்” என்று கொஞ்சம் தமிழும் நிறைய ஆங்கிலமும் கலந்து பேசுகிறார் செரினியன்.

           குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழுவினருடனேயே தங்கிய செரினியன், ஆவணப்படுத்துவதற்கான முதல் கட்டமாக தப்பாட்டக் கலையை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார். மிருதங்கம் மற்றும் டிரம்ஸ் இசைக்கலைஞர் இவர் என்பதால் தப்பாட்டக் கலைஞர்கள் கற்றுக் கொடுத்த இசை மிக எளிதில் செரினியனுக்கு வசப்பட்டுவிட்டது. அதிலும் தப்பு அடித்துக் கொண்டே ஆடுவது சற்று சிரமமான காரியமெனினும் அதையும் கற்றுக் கொண்டு இவர் சிறப்பாக ஆடுவது ஆச்சரியம்.

          “தப்பாட்டக் குழுவில் உள்ள 9 பேரும் எனது ஆசான்கள். அவர்கள் சிறப்பான முறையில் எனக்குக் கற்றுக் கொடுத்தனர். தப்பில் உள்ள அந்தத் தாள அடிகளை வாயால் கூறி எளிதாக எனக்கு விளங்க வைத்தனர். எனது ஆசான்கள் சொல்லிக் கொடுக்கும் தாளங்கள் சில நேரம் சற்று கடினமாக இருந்தாலும், அதை எப்படியாவது முயற்சித்துக் கற்றுக் கொள்ளும் மாணவியாகத் தான் நான் இருந்தேன்” என புன்னகைக்கிறார் செரினியன்.

ஏசையா
          குறிஞ்சி மலர் குழுவின் வாத்தியார் ஏசையா கூறுகையில், “செர்னியன் அம்மாவுக்கு தப்பு கத்துக் கொடுக்கும் போது சில நேரம் அவங்க சரியா பண்ணலேனு நாங்க கோபப்பட்டாலும், ரொம்ப பொறுமையா நடந்துக்குவாங்க. அதே சமயம் எங்களுக்கு அவங்க பல்வேறு விஷயங்களில் வழிகாட்டியாகவும் இருப்பாங்க. வெளிதேசத்துல பேராசிரியரா இருக்கற அவங்களே ஒரு மாணவியா நம்மகிட்ட பாடம் படிக்கிறப்போ, நாமளும் நம்ம கலைக்கு மரியாதை செய்யணுமில்ல? அதனாலதான் அவங்க எங்க குழுவுக்கு வந்து, எனக்கு சொன்ன அறிவுரைகளால் நான் மதுப்பழக்கத்தை சுத்தமா விட்டுட்டேன். 2 வருஷமாச்சு. ஒரு ஆசானா இருந்து அத்தனை நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தேன்” என்றார் பெருமிதத்துடன்.

         செரினியன், சென்ற இரண்டு வருடங்களாகத் தமிழகத்தில் அலைந்து திரிந்து தப்பாட்டக் கலையினை காட்சிகளாக ஆவணப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக திண்டுக்கல் ‘சக்தி தப்பாட்டக் குழு’வை சேர்ந்த பெண்கள் கம்பீரமாக தப்படித்துக் கொண்டே, தாளம் தப்பாமல் சுழன்று சுழன்று ஆடியதைக் கண்டு இன்னும் சொல்லி வியக்கிறார். அதே நேரம் தப்பாட்டக் கலைஞர்கள் சில பொது நிகழ்ச்சிகள் மற்றும் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளில் தப்பு இசைக்கின்றனர். அந்த வேலை இல்லாத நேரங்களில் கூலி வேலைகளுக்குச் செல்வதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. அரசர்கள் காலத்தில் செய்திகளை பறைசாற்றுவதற்கு பயன்பட்ட இந்த இசை, இன்று தலித் மக்களுக்கான விடுதலையிலும் முக்கியப் பங்காற்றுவது மகிழ்ச்சியான திருப்பம். இப்பேர்ப்பட்ட மகத்தான இசைக்கலைஞர்களுக்கான வாழ்வாதாரம் சிறப்பாக இருக்க வேண்டுமல்லவா? “ என்றார் வருத்தத்துடன்.

          ‘திஸ் இஸ் எ மியூசிக்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் தப்பாட்டக்கலை ஆவணப்படத்தை செரினியன் அமெரிக்காவில் திரையிட்டபோது அங்குள்ள பலரும் இந்த இசையை தாங்களும் கற்றுக் கொள்ள ஆசையாக இருப்பதாகக் கூறி இருக்கின்றனர். குறிப்பாக பெண்கள் தப்படித்துக் கொண்டு ஆடியதைப் பார்த்து பலமாகக் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கின்றனர். மேலும் சமீபத்தில் இத்தாலியில் இப்படத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு திரையிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

          கடந்த டிசம்பர் மாதம் ‘திஸ் இஸ் எ மியூசிக்’ ஆவணப்படத்தை முதன் முதலாக மதுரையில் பிரிவியூ ஷோ போட்டுக் காண்பித்த போது, படத்தில் முக்கியப் பங்களித்த குறிஞ்சி மலர் தப்பாட்டக் குழுவினரே சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். வெகு நாட்கள் கழித்து தனது ஆசான்களான தப்பாட்டக் கலைஞர்களை சந்தித்த உற்சாகத்தில் அவர்களுடன் சேர்ந்து தப்பு அடித்துக் கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தார் செரினியன்.

          “அடுத்து நான் எடுக்கப் போகும் ஆவணப்படத்தில் முழுக்க முழுக்க பெண்களே பணிபுரிவார்கள். அது தலித் மக்கள் கலைகளை வெவ்வேறு கோணங்களில் கூறுவதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அந்த ஆவணம் பார்ட்டிசிபேட்ரி வீடியோவாக பதிவு செய்யப்படும்” என்றார் செரினியன். பார்ட்டிசிபேட்ரி வீடியோ என்பது, சம்பந்தப்பட்ட கலைஞர்களே வெவ்வேறு குழுவாகப் பிரிந்து ஒரு பகுதியினர் படத்தை பதிவு செய்வர். மற்றவர்கள் அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பர். “இது போன்ற பங்களிப்பு வீடியோ தயாரிப்பின் மூலம் அவர்களுக்கு எளிய கேமராக்களில் வீடியோ எடுக்க கற்றுக் கொடுப்பதால் மிக எளிய வடிவிலான ஆவணப்படத்தை அவர்களே தயாரிக்க முடியும்” என்கிறார் செரினியன்.

சோயி செரினியனின் மின்னஞ்சல் முகவரி: zsherinian@ou.edu

(*எத்னோ மியூசிக்காலஜி: உலகத்திலுள்ள ஒவ்வொரு இனமும் தங்களுக்கென ஒரு இசையைப் பாரம்பரியச் சொத்தாகப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளது. இசைக்கருவி, ஒலி போன்றவை இடத்துக்கும் மக்களுக்கும் ஏற்றபடி மாறுகின்றன. இப்படிப்பட்ட இசையை அதன் கலாச்சாரப் பின்னணியோடு கற்றுக் கொள்ளும் படிப்பு தான் எத்னோ மியூசிக்காலஜி.)

(நன்றி: புதிய தலைமுறை)

Sunday, January 22, 2012

மக்கள் நலனே மருத்துவர் நலன்!

--------- எஸ்.கார்த்திகேயன் ---------

டாக்டர்  சுப்ரமணியன்
           இந்தியா சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் கூட கிராமப்புறங்களில் மருத்துவ சேவை அரிதான ஒன்றாகத்தான் இருக்கிறது. மருத்துவர்களும் கிராமங்களில் பணியாற்றுவதற்கு விரும்பி முன்வருவதில்லை. அனைவருமே நகரத்தை நோக்கி படை எடுக்க வேண்டிய நிலை. ஆனால், தனது சொந்த கிராமத்தில் நகர மருத்துவமனைகளைக் காட்டிலும் ஹைடெக் மருத்துவமனையைக் கட்டி, தன் மருத்துவ சேவையை தொடர்கிறார் ஒரு மருத்துவர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன் தான் அந்த அபூர்வ மருத்துவர்.

         படிப்பை முடித்துவிட்டு லண்டனில் பணிபுரிந்த போது தமிழ்நாட்டில் அரசு மருத்துவராக பணி நியமனம் கிடைத்திருக்கிறது. சொந்த நாட்டில் பணியாற்ற வேண்டும் என்பதாலேயே லண்டன் பணியைத் துறந்துவிட்டு நாகை மாவட்டத்திலேயே அரசு மருத்துவராக சுமார் 12 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார் சுப்ரமணியன். ஆனால், அங்குள்ள வசதிகளை வைத்துக் கொண்டு தம் மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் மக்களுக்குத் தரமான மருத்துவ சேவையை அளிக்க முடியவில்லையே என்ற மனக்குறை அவருக்கு. அதனால், அரசு வேலையை உதறித் தள்ளிவிட்டு சில ஆண்டு போராட்டங்களைக் கடந்து, தன் கனவு மருத்துவமனையை சமீபத்தில் தன் சொந்தக் கிராமத்திலேயே கட்டியுள்ளார். இவரின் தந்தை, நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து சுதந்திரத்திற்குப் போராடியவர். அப்பாவின் ஆசைக்கிணங்க தன் சொந்த கிராமத்தில் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு ‘நேதாஜி மருத்துவமனை’ எனப் பெயர் வைத்திருக்கிறார் டாக்டர் சுப்ரமணியன்.



          இந்த மருத்துவமனைக்காக மிக அக்கறை எடுத்து இவர் அமைத்திருக்கும் வசதிகள் ஏராளம். ஆபரேஷன் தியேட்டர், தீவிர சிகிச்சைப் பிரிவு, நோயாளிகளுக்கான அனைத்து அறைகளையும் இணைக்கும் ஆக்ஸிஜன் குழாய்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டோமேட்டிக் ப்ளட் டெஸ்ட், அதிநவீன எக்ஸ் ரே, இசிஜி கருவிகள் என்று அனைத்தும் ஒரு மாநகர தனியார் மருத்துவமனைக்கு இணையாக இருக்கின்றன.


         “ஒரு கிராமத்தில் இவ்வளவு பெரிய மருத்துவமனை கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. பல வருடங்களாக நான் சம்பாதித்த பணத்தை வைத்து மருத்துவமனையைக் கட்ட ஆரம்பித்து விட்டேன். சில சிரமங்களுக்குப் பின் இந்தியன் வங்கியில் கடன் கிடைத்தது. ‘இந்தக் கிராமத்துல எல்லா வசதிகளோட இப்படியொரு மருத்துவமனை கட்டுகிறீர்களே, வரவேற்பு இருக்குமா?’ என்று நிறைய பேர் கேட்டார்கள். பெரும்பாலும் கிராமப்புறங்களிலேயே இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவ வசதி சிறப்பானதாகக் கிடைப்பதில்லை. ஓர் அவசர சிகிச்சை என்றால் கூட அவர்கள் நாகப்பட்டிணம் போக வேண்டும். அங்கே பார்க்க முடியாது என்றால், தஞ்சாவூர் போக வேண்டும். இதைக் கருத்தில்கொண்டே இதை 24 மணி நேர எமர்ஜென்சி கேர் மருத்துவமனையாக அமைத்திருக்கிறேன்” என்றார் டாக்டர் சுப்ரமணியன் பெருமையாக.

         இவர் தன்னிடம் இருக்கும் ஒரே கைபேசி எண்ணை தனது குறிப்புச்சீட்டு முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் எமர்ஜென்சி எண் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 24 மணி நேரமும் தன் மருத்துவ சேவையை தங்கு தடையில்லாமல் செய்ய இது உதவியாக இருக்கும் என்பது இவரது எண்ணம்.

         “லேப் டெக்னீஷியன்கள், மருத்துவ சாதனங்களைக் கையாள்வது போன்ற வேலைகளுக்கு என் நட்பு வட்டத்தில் பல பேரிடம் கேட்டேன். கிராமத்திற்கு வந்து வேலை செய்ய யாரும் தயாராக இல்லை. பின், இந்தக் கிராமப் பகுதிகளிலேயே செவிலியர் படிப்புகள் படித்த பெண்களுக்கு வேலை கொடுத்து, அதி நவீன சாதனங்களைக் கையாள்வதற்கு நானே பயிற்சி அளித்தேன். அதற்கான வரைமுறைகள் அனைத்தையும் தெளிவாக எழுதி அவர்களிடம் கொடுத்திருப்பதால், திறமையாக வேலையைச் செய்து முடிக்கிறார்கள். அதோடு, கிராமத்து மக்கள் நெஞ்சு வலி போன்ற அவசர சிகிச்சை என்றால் நேராக இங்கு வருவார்கள். முதலில் நாங்கள் சிகிச்சை தான் அளிப்போம். அந்த தருணத்தில் பணத்தை உடனே கட்டுங்க என்றெல்லாம் நிர்பந்திக்க மாட்டேம். அவர்கள் நன்கு குணமாகி வீட்டிற்குச் சென்றபின் கூட சிகிச்சைக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறோம்” என்கிறார் இவர்.

அண்ணா.பாலகுமார்
          “சுப்ரமணியன் டாக்டர் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் போதே இப்பகுதி மக்களிடையே அவரது அக்கறையான சிகிச்சை ரொம்ப பிரசித்தம். இப்ப சொந்தக் கிராமத்திலேயே பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறார். சுத்தி இருக்கிற கிராமத்து மக்கள் எல்லாரும் அங்க போறாங்க. நவீன வசதிகள் இருந்தாலும் இப்பகுதிகளில் இருக்கிற மற்ற டாக்டர்கள் வாங்குற ஃபீஸ்தான் வாங்குறார்” என்றார், செம்போடை கிராமத்தைச் சேர்ந்த அண்ணா.பாலகுமார்.

         பொதுவாக, கிராமங்களிலிருந்து மருத்துவ உதவி பெற நகரங்களுக்குத் தான் போவார்கள். டாக்டர் சுப்ரமணியன் மருத்துவமனையை இங்கே அமைத்த பிறகு, பக்கத்து நகரங்களிலிருந்தும் கூட இந்தக் கிராமத்தைத் தேடி நோயாளிகள் வர ஆரம்பித்திருப்பது ஓர் ஆச்சர்யமான இனிய மாற்றம்.

(டாக்டர் சுப்ரமணியத்தின் ‘எமர்ஜென்சி’ கைபேசி எண்: 94426 49959)

(நன்றி: புதிய தலைமுறை)

உணவு(உழவர்) சந்தை

---------- எஸ்.கார்த்திகேயன் ----------


'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது’ என்பார்கள். ஆனால், ஓட்டல் வைத்தால்? தாங்கள் உற்பத்தி செய்த உணவுத் தானியங்களை  மதிப்புக்கூட்டி விவசாயிகள் சமைத்தும் விற்கிறார்கள் மதுரையில். மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் முயற்சியினால் உருவான இந்த உழவன் உணவகம், மதுரை நாராயணபுரத்தில் அமைந்துள்ளது. அமோகமாக விற்பனையாகிறது.

இன்றைய நிலையில் பீட்ஸா,  பர்கர் போன்ற கலோரி அதிகமுள்ள துரித உணவுகள் இளைய தலைமுறையினரை நோயாளிகளாக்கி அவர்களது சராசரி வாழ்நாளை குறைத்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்  என்கிற நோக்கத்தில்தான் இந்த உழவன் உணவகம் ஏற்படுத்தப்பட்டது.  இங்கு தனித்தனி  ஸ்டால்கள் வைத்திருக்கும் உழவர்கள், தாங்கள் விளைவித்த சிறுதானியங்களை தாங்களே சமைத்து விற்கிறார்கள். இதனால், இடைத்தரகர்கள், விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமை போன்ற பிரச்சினைகள் கிடையாது.  உழவர்கள் பகலில் உழவுப் பணிகளைச் செய்வதால் மாலை 5 மணியிலிருந்து இரவு வரை உழவன் உணவகம் இயங்குகிறது.

பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, தினை, வரகு போன்றவற்றை சாதாரணமாக சமைத்து விற்றால் யாரும் அதனை தற்போது விரும்ப மாட்டார்கள். ஆகையால், மதுரை தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரியில் இருந்து விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பாரம்பரிய உணவு வகைகளை மதிப்புக் கூட்டி சிறுதானியங்கள் மற்றும் மூலிகை உணவு வகைகளை மக்கள் விரும்பும் வகையில் சுவையாக விதவிதமான உணவுப்பொருட்களாக தயாரிக்கக் கற்றுத் தரப்படுகிறது. உதாரணமாக தினையில் பணியாரம், சேவு,அப்பம்; கம்பில் சீவல், கம்பங்கஞ்சி; வரகு அரிசியில் பொங்கல்,பிரியாணி, அதிரசம்;  சிறுதானியங்களில் முடக்கு அறுத்தான் தோசை, முள் முருங்கை தோசை, செம்பருத்தி இட்லி; குதிரைவாலிப் பொங்கல்; அத்திப்பழ அல்வா என நீண்டுகொண்டே செல்கிறது உழவன் உணவகத்தின் மெனு.


"சாதாரண கூலித் தொழிலாளி முதல் பணக்காரர்கள் வரை பல்வேறு தரப்பினர் இங்கு வர்றாங்க. அவங்க உடல் ஆரோக்கியத்திற்கு இந்த உணவு வகைகள் சிறந்தது என எண்ணுகிறார்கள். உணவுப் பொருட்களின் விலையும் குறைவானதாகவே விற்கிறோம். மதுரைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் நம் தமிழக பாரம்பரிய உணவு வகைகளை விரும்பிச் சாப்பிட்டு விட்டு தங்கள் நாடுகளுக்கும் வாங்கிச் செல்கின்றனர். மேலும் இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன் போன்ற நாடுகளுக்கும் உழவன் உணவகத்திலிருந்து குறிப்பிட்ட சில ஆர்டரின்பேரில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செஞ்சிருக்கோம். இங்கு சாப்பிட வரும் இக்கால தலைமுறையினர், ‘நாங்க இப்படி ஓர் உணவு வகைகளை பார்த்ததே இல்லை’ என்கின்றனர்.

சமீபத்தில் கலெக்டர் தலைமையில் மதுரை மாவட்ட அளவிலான பேங்கர்ஸ் மீட்டிங் நடந்தபோது, சோள பிஸ்கெட், தினைச் சேவு போன்ற உழவன் உணவகப் பொருட்கள் பரிமாறப்பட்டன. வங்கி அலுவலர்களிடம் அவை மிகுந்த வரவேற்பையும் பெற்றன. அதனால் தலைமை வங்கி அதிகாரி, இனி வங்கி சம்பந்தமான மீட்டிங் நடந்தால் உழவன் உணவகப் பொருட்களை வாங்குங்க என்று மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் மெயிலில் அறிவுறுத்தினார். மொத்தத்தில் விவசாயிகளுக்கு ஒரு வாழ்வாதாரமாக விளங்கும் உழவன் உணவகம் மக்களுக்கு விலை குறைவான, தரமான பாரம்பரிய உணவு வகைகளும் வழங்குகிறது..." என்றார், உழவன் உணவகத்தை நிர்வகித்துவரும் மதுரை வேளாண் விற்பனைத் துறை அலுவலர் ஆறுமுகம்.

தனலட்சுமி

வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தியான தனலட்சுமி  வறுமையில் வாடியதை அறிந்த கலெக்டர் சகாயம், அவருக்கு உழவன் உணவகத்தில் ஸ்டால் அமைக்க உதவியுள்ளார்.    "வறுமையில் வாடிக்கொண்டிருந்த என்னை அழைத்து வந்து பயிற்சியெல்லாம் அளித்து, உழவன் உணவகத்தில் ஒரு தொழிலை வைத்துக் கொடுத்தனர். இந்த வயதிலும் நான் சுயமாக சம்பாதிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 1,000 ரூபாய் வருமானம் வருகிறது. உழவன் உணவகம் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை அளித்துள்ளது" என்றார் தனலட்சுமி.

சகாயம், மதுரை மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் கூறுகையில், "இந்த முயற்சி நான் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோதே நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய நகரங்களில் விவசாயிகளை மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயார் செய்பவர்களாகவும் விற்பனை செய்பவர்களாகவும் பயிற்சி அளித்து செயல்படுத்தினோம். அங்கு உழவன் உணவகம் தொடங்கிய 11 மாதங்களில் ஏறக்குறைய 1 கோடியே 60 லட்சத்திற்கு விற்பனையானது. அப்போது 3 விவசாயிகள் கார் வாங்கியது குறிப்பிடத்தக்கது. நீண்ட நெடுங்காலமாக நம் தமிழ்ச் சமூகம் சாப்பிட்டு வந்த சத்தான, பாரம்பரிய உணவுகளை இன்று விவசாயிகள் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு அளித்து வருகிறார்கள். மேலும் மதுரையில் பல்வேறு இடங்களில் உழவன் உணவகம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

மதுரையில் உழவன் உணவகம் அமைக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2 வருடங்களுக்குமுன் சகாயம், நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது, அங்கு ஆரம்பித்து நன்றாகச் செயல்பட்டு வந்த உழவன் உணவகம் தற்போது மூடப்படும் நிலைமையில் உள்ளது. உழவன் உணவகம் என்ற இத்தகைய நல்ல திட்டத்தை அரசு, தமிழக அளவில் செயல்படுத்தினால் உழவர்கள் வாழ்வும் செழிக்கும்.  அழிந்து வரும் நம் பாரம்பரிய உணவு வகைகளை கல்விக் கண்காட்சிகளில் காட்சிப் பொருள்களாக மட்டுமே பார்க்கும் அவல நிலையும் மறையும்.

(நன்றி: புதிய தலைமுறை)

Monday, December 26, 2011

புங்க விதையிலிருந்து பயோ டீசல்!

-------------- எஸ்.கார்த்திகேயன் -------------

புங்க விதையிலிருந்து பயோ டீசல் தயாரித்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்கள் மயிலாடுதுறை வடகரை கிராமப்பள்ளி மாணவிகள்.

(இடமிருந்து வலம்) ஆசிரியை ரோஸ்னா பர்வின் மற்றும் மாணவியர் லியானா ஃபஹஜத்  -  அரஃபாத் நிஷா.

        புங்க மரங்கள் நிறைந்த அழகிய சூழலில் அமைந்திருக்கிறது, நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே வடகரை கிராமத்திலுள்ள ஹஜ்ஜா சாரா அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி. மரத்திலிருந்து தினந்தோறும் உதிரும் புங்கம் காய்கள் குப்பைகளோடு சேர்ந்து வீணாவதைக் கண்டனர் அந்தப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அரஃபாத் நிஷா மற்றும் லியானா ஃபஹஜத்.

       குப்பை என வீணாகும் பொருளிலும் ஒரு பயன் இருப்பதை உணர்ந்தனர் அவர்கள். புங்க மர விதையிலிருந்து பயோ டீசல் எடுக்க முடியும் என்ற தகவலை அறிந்து அதை செயற்படுத்த முயன்றனர்.

        பள்ளியின் தாவரவியல் ஆசிரியை ரோஸ்னா பர்வின் வழிகாட்டுதலுடன், புங்க விதையிலிருந்து பயோ டீசல் தயாரித்துக் காட்டினர்.
அதுமட்டுமில்லாமல், தாங்கள் தயாரித்த புங்க எண்ணெயைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்கிக் காட்டினர்.

        தங்களது ஆய்வு குறித்து பெருமையுடன் விவரித்தனர் லியானா ஃபஹத்தும், அரஃபாத் நிஷாவும்.

        “நன்கு வளர்ந்த புங்க மரத்திலிருந்து ஆண்டுக்கு 9 முதல் 90 கிலோ வரை விதை கிடைக்கும். இந்த விதையிலிருந்து புங்க எண்ணெய் தயாரிக்க முடியும் என்பதை அறிந்தோம். 4 கிலோ விதையிலிருந்து 1 கிலோ புங்க எண்ணெய் எடுக்க முடியும். 1 கிலோ எண்ணெயிலிருந்து 3 யூனிட் மின்சாரம் கிடைக்கும். எளிதில் கிடைக்கும் புங்க எண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தும் போது அதிக விலையுடைய பெட்ரோல் டீசல் பயன்பாடு குறையும்” என்று புள்ளி விவரம் தருகிறார்கள் இருவரும்.

        புங்க விதைகளை நன்கு காய வைத்து அதை பின் நன்கு வடிகட்டி அந்த எண்ணெயை பயோ டீசலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் இவர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்க, உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

       “மெர்சீடஸ் என்ஜின் பொருத்தப்பட்ட அம்பாசிடர் காரை ஆய்வுக்காக பயன்படுத்தினோம். சுத்தமான பயோ டீசலைக் கொண்டு நேரடியாக என்ஜினை இயக்க முடியாது. ஆகவே, இரு வழிக் குழாய்களின் உதவியால் முதலில் பெட்ரோல் டீசல் கலனிலிருந்து சிறிது நேரம் என்ஜினை இயங்கச் செய்துவிட்டு, பின் புங்க மர பயோ டீசல் மூலம் இயங்கச் செய்தபோது, அந்த அதிசயம் நிகழ்ந்தது. பெட்ரோல்  டீசலில் இயங்கிய போது என்ஜின் சற்று உதறலுடன் காணப்பட்டது. ஆனால், பயோ டீசலில் என்ஜின்  மென்மையாக இயங்கியது. அத்துடன், அது எரிந்து வெளியிடும் புகையும் கரியை உமிழாமல், கண்ணை உறுத்தாமல், மூக்கை நெருடாமல், சுற்றுப்புறச்சூழலை கெடுக்காத வகையில் இருந்தது” என்று விவரிக்கும் மாணவிகள், தங்களின் ஆய்வுக்கு உதவியாக இருந்தவர் ரோஸ்னா பர்வீன் டீச்சர் என்கிறார்கள் நன்றியுடன்.

         புங்க மர பயோ டீசல் கண்டுபிடிப்பின் போது இவர்களுக்கு மேலும் ஒரு உண்மை புரிந்துள்ளது.

        அதாவது, மிகக் குறைந்த வெப்பநிலையில் பயோ டீசல் திடமாக மாறக்கூடியது. ஆகவே, மிகக் குறைந்த வெப்பநிலையில் டீசல் என்ஜினை இயக்க முடியாது. சிறிது நேரம் பெட்ரோல் டீசலைக் கொண்டு என்ஜினை இயக்கிய பின்பே, பயோ டீசலைக் கொண்டு இயக்கும் நிலை உள்ளது. ஆண்டிஜெல் மற்றும் வெப்பத்தகடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்சினையை எளிதில் சரி செய்யலாம் என்கிறார்கள் இவர்கள்.

நாகை கலெக்டர் முன் ஆய்வை விவரிக்கும் மாணவியர்
        சமீபத்தில் நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் டி.முனுசாமி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், புங்க விதையில் தயாரித்த பயோ டீசலைக் கொண்டு கார் என்ஜினை இயக்கிக் காட்டியுள்ளனர். மாணவிகளின் கண்டுபிடிப்பு விவரங்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளாராம் நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர்.

        புங்க விதை பயோ டீசலின் பயன்கள் குறித்துப் பட்டியலிட்டார் மாணவிகளின் வழிகாட்டி ஆசிரியை ரோஸ்னா பர்வின்.

ரோஸ்னா பர்வின்
        ”புங்க விதை பயோ டீசல், பெட்ரோலியப் பொருட்களைப் போல் எளிதில் தீப்பிடித்து வெடிக்காது. காற்றை மாசுபடுத்தாது. அமில மழை, புவி வெப்பமடைதல் போன்றவை இந்த டீசல் பயன்பாட்டால் குறையும். இந்த பயோ டீசலில் உயவுத் தன்மை முழுவதுமாக எரியக்கூடிய பண்புடையதால், பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கிடைக்கும் எரிசக்திக்கு இணையான சக்தியை உடையது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கையில், விலைக் குறைவான பயோ டீசல் எரிசக்தியை மாற்று சக்தியாக பயன்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் உயர்த்த முடியும்” என்கிறார் ரோஸ்னா.

குணசேகரன்
         “இந்த இளம் வயதில் மாற்று எரிபொருள் கண்டுபிடித்துள்ள இந்த மாணவிகளின் ஆர்வம் பாராட்டுக்குரியது. புங்க மரம் சார்ந்த தொழிலில் ஈடுபட முன்வருவோரை ஊக்கப்படுத்தி, அரசு மானியம் வழங்கி பயோ டீசலை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால், நம் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி காண முடியும்” என்கிறார் ஹஜ்ஜா சாரா அம்மாள் பள்ளி முதல்வர் குணசேகரன்.

(நன்றி: புதிய தலைமுறை கல்வி)

Saturday, November 12, 2011

கண்மொழி!


நம் கண்கள் இமைச் சிறைகளுக்குள்
அடைபட விரும்பவில்லை
அனைவரும் தூங்கியபின் நம் கண்கள் மட்டும்
இரகசியங்களைப் பரிமாறுகிறது வெகு நேரமாக
இரகசியங்கள் வெளிப்படுமோயென சிறைவாசம்
செல்ல எத்தனிக்கிறது என் கண்கள்
அட பைத்தியமே, நம் கண்கள் பேசும்
மொழியை நம்மையன்றி யாரறிவார் என
செல்லச் சிணுங்கல் போடுகிறது அவள் கண்.

Friday, November 11, 2011

சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேருது!

--------- எஸ்.கார்த்திகேயன் --------


’குழந்தைகள் எதிர்காலத்தின் பிரதிநிதிகள்’ என்றார் ஜவஹர்லால் நேரு. அந்தப் பிரதிநிதித்துவத்தை அவர்களின் சிறு பருவத்திலிருந்தே வளர்ப்பது நம் கடமை. அதற்கு ஏட்டுக் கல்வி மட்டுமே போதுமானதாக அமையாது. சமூகம் சார்ந்த பணிகளில் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதனால் அவர்களின் பல்நோக்குத் திறன்கள் அதிகரிக்கும். இந்தக் குறிக்கோளை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது, மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட பங்கேற்பு கற்றல் ஆதார மையம்” (RCPDS - Resource Center for Participatory Development Studies) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகளுக்கான ஆக்கப் பணிகளைச் செய்து வருகிறது இந்த அமைப்பு.

சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, களப்பணிகள், குழந்தைகளுக்கான உரிமைகள், வாழ்க்கைக் கல்வி என ஆர்.சி.பி.டி.எஸ் தன் ஒவ்வொரு சமூகப் பணிகளையும் இலக்குகளை குறி வைத்து தனி இயக்கங்களாக நடத்தி வருகிறது. அதன் கதாநாயகர்கள் அனைவருமே குழந்தைகள் என்பதுதான் சிறப்பம்சம். கலந்தாலோசித்தல், திட்டமிடுதல், திட்டங்களை செயல்படுத்தல்  அனைத்தும் குழந்தைகள் கையில். அவர்களுக்கு உதவி புரியும் ஒரு கருவியாக மட்டுமே ஆர்.சி.பி.டி.எஸ் இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு உதவியாக ஒவ்வொரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்களும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கின்றனர்.

தட்பவெப்ப மாற்றங்கள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும் செயற்கை விவசாயம், அடிப்படை உணவுப் பாதுகாப்பின்மை போன்றவைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது எதிர்கால தலைமுறைகளான குழந்தைகளே. இதை கருத்தில் கொண்டு, விருதுநகர் அருகே திருச்சுழியில் தட்பவெப்ப மாற்ற நீதிக்கான குழந்தைகள் இயக்கம்ஆர்.சி.பி.டி.எஸ் சார்பில் இயங்குகிறது. குழந்தைகளே நடத்தும் பாலர் பஞ்சாயத்தும்இதனுடன் இணைந்தவை. குழந்தைகள் அவர்களுக்குள்ளாகவே தேர்ந்தெடுத்த தலைவர் பாலர் பஞ்சாயத்தை நிர்வகிக்கிறார். இதன் சார்பில் இயற்கை வேளாண்மை கற்றல் மையம்இயங்குகிறது. பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளே விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். உள்ளூர் பஞ்சாயத்து சார்பில் அக்குழந்தைகளின் அடிப்படை இயற்கை விவசாயக் கற்றலுக்காக 10 ஏக்கர் பரப்பளவிலான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.சி.பி.டி.எஸ் உதவியுடன் அந்த நிலத்தை உழுது விவசாயத்திற்கு உரிய நிலமாக மாற்றிய பெருமை பாலர் பஞ்சாயத்தைச் சார்ந்த குழந்தைகளையே சாரும்.

நிலத்திற்கு உரமிடுகிறார்கள்

பாரம்பரிய விதைகளான சாமை, வரகு, திணை போன்றவைகளையே பயிரிடுகின்றனர். பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகாவ்யா பயிர்ஊக்கி (பசுஞ்சாணம், பசு மூத்திரம், பால், தயிர், நெய் ஆகியவைகளின் கலவை) போன்ற இயற்கை உரங்களையே பயிர்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குழுவிலிருந்து வந்து ஒருவர், இக்குழந்தைகளுக்கு சில பயிற்சிகளை அளித்துள்ளார். இயற்கை விவசாயம், நில நீர் மேலாண்மை போன்றவைகளின் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார். வறட்சிப் பகுதியாக அறியப்படும் விருதுநகருக்கு உகந்ததான, நில நீர் மேலாண்மை பயிற்சி குழந்தைகளின் விவசாயத்திற்கு பெரிதும் கைகொடுத்துள்ளது.
பயிற்சியில் மாணவர்கள்
ஜான் தேவாரம்

இது பற்றி ஆர்.சி.பி.டி.எஸ். தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஜான் தேவாரம் கூறுகையில், “குழந்தைகளின் பன்முகத் திறன் வளர்ப்பே எங்களின் முக்கிய நோக்கம். பள்ளிகளில் வாழ்க்கைக் கல்வியை கற்றுத் தருவதில்லை. ஆகவே, அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் களப்பணிகள் குறித்த பயிற்சியில் அவர்களாகவே வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக் கொள்கின்றனர். அதனால் அவர்களின் உரிமைகளைக் காக்க அவர்களே போராடுகிறார்கள். மேலும் மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கும் இயற்கை விவசாய முறைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும், நாளைய வேளாண்மையும் சிறக்கும்” என்றார் புன்னகையுடன்.
(நன்றி:புதிய தலைமுறை)